மதுரை:நிதி ஒதுக்கீடு இல்லாததால், மதுரை போடி அகல ரயில் பாதை பணிகள்
கிடப்பில் போடப்பட்டன. இதனால் திட்ட மதிப்பீடு மேலும் உயரும் அபாயம்
உள்ளது.
மதுரை போடி இடையே, 90.40 கி.மீ., தூரமுள்ள மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக்க, 2006ல் ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, 167.85 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
மதுரை போடி இடையே, 90.40 கி.மீ., தூரமுள்ள மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக்க, 2006ல் ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, 167.85 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
வாரியம் அறிவிப்பு:இந்த வழித்தடத்தில் உள்ள நான்கு ஸ்டேஷன்கள், எட்டு பெரிய பாலங்கள், 194 சிறிய பாலங்களை விரிவுப்படுத்தவும், ஆண்டிப்பட்டி கணவாய் மலை பகுதிகளில், மலைகளை குடைந்து அகலப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. ‘டெண்டர்’ பணிகளுக்காக, 15 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, 2009ல் வாரியம் அறிவித்தது. இதில் முதற்கட்டமாக, 5 கோடி ரூபாயும், 2013 15ம் நிதியாண்டில், 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டன.இந்த தொகையை கொண்டு, மூன்று பெரிய பாலங்களுக்கு டெண்டர் விடும் பணி மட்டும் நடந்தது. கட்டுமான பிரிவு உதவி தலைமை பொறியாளர் மனோகரன் தலைமையில் பொறியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது திட்ட மதிப்பீடு, 282.66 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதற்கு ஒப்புதல் கோரி, ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அகலப் பாதை அமைக்க, இந்த வழித்தடத்தில், 2010 டிச., 31ம் தேதியுடன் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தண்டவாளங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. மூன்றாண்டுகளாக திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை. இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. குறைந்தது, 50 கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே பணிகள் துவக்கப்படும். திட்ட மதிப்பீடு:இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, சமீபத்தில் மதுரையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். நிதி பற்றாக்குறை காரணமாக, நிலுவையிலுள்ள அகல பாதை பணிகள், ‘ஆமை’ வேகத்தில் நடக்கின்றன. இதனால் தற்போதைய திட்ட மதிப்பீடு மேலும் உயரும் அபாயம் உள்ளது.மதுரை கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இக்கோட்டத்தில் அகல பாதை பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுகின்றன. நிதி ஒதுக்கீடு இல்லாதது பணிகள் தாமதமாவதற்கு காரணம். மேலும் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன், அதனால் கிடைக்கும் வருவாயையும் கணக்கில் எடுக்கப்படும். போக்குவரத்து இருக்குமா என ஆராயப்படும். இவற்றை பரிசீலித்து, நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யும். இருப்பினும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை, ஒரே தவணையில் ஒதுக்கீடு செய்யவும், திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கவும், சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், பணிகள் உடனடியாக துவக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments