4 நிமிடத்தில் 384 மூட்டை மானிய விலை சிமென்ட் கொள்முதல் : மணப்பாறை அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மீது "பகீர்' புகார்

திருச்சி: மானிய விலை சிமென்ட்டை, அதிகாரத்தை பயன்படுத்தி, விதிமுறைக்கு புறம்பாக, மணப்பாறை, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பெற்றது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், ஆறு ஆண்டுக்கு முன், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 180 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, இருந்தது. கடந்த, தி.மு.க., ஆட்சியில் கடைசி ஓராண்டில் சிமென்ட் விலை தாறுமாறாக உயர துவங்கியது.
தங்கத்துக்கு இணையாக சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வும், கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வின் வீழ்ச்சிக்கு காரணமாகும். சிமென்ட்டை ஏழை, நடுத்தர மக்கள், பொருளாதார சிக்கலின்றி பெறும் வகையில், மானிய விலை சிமென்ட் திட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதன்படி ஒரு மூட்டை சிமென்ட், 200 ரூபாய்க்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் அரசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசின் மானிய விலை சிமென்ட் திட்டம் மூலம், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டுமே சிமென்ட் பெற முடியும். அதுவும் வீடுகட்டவும், வீடு பராமரிப்பு பணி செய்யவும், சமூக நல காரியங்களுக்கு மட்டுமே மான்ய விலை சிமென்ட் வினியோகம் செய்யப்படும். அதுவும் வீடு கட்ட என்றால், 400 மூட்டை சிமென்ட், அதுவும் பல்வேறு காலகட்டத்திலும், பராமரிப்பு பணிக்கு, 50 மூட்டையும் மானிய விலையில் வழங்கப்படும்.

அப்படி ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அளிக்கப்படும் மானிய விலை சிமென்ட்டை, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மணப்பாறை தொகுதி, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரசேகர் பெற்றுள்ளார். அதுவும், நான்கு நிமிடத்தில், 384 மூட்டை சிமென்ட்டை மானிய விலையில் அவர் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக யாராக இருந்தாலும், ஒருநாளைக்கு, நூறு மூட்டைக்கு மேல் சிமென்ட் வழங்கப்படுவதில்லை. ஆனால், எம்.எல்.ஏ., என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, கடந்த, 14ம் தேதி, ஒரேநாளில், 384 மூட்டைகளை, எம்.எல்.ஏ., சந்திரசேகர் பெற்றுள்ளார். இது அரசின் விதிமுறைக்கு மாறான செயலாகும். இதனால் சீனியாரிட்டி அடிப்படையில் சிமென்ட் கேட்டு பதிவு செய்துள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் திட்டத்துக்கு, ஆளுங்கட்சியின், எம்.எல்.ஏ.,வே ஆப்பு வைத்தது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பினாமிகள் சிலரது பெயரில் கான்ட்ராக்ட் வேலைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மணப்பாறையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பூபதிராஜ் கூறியதாவது: ஒருநாளைக்கு, 100 மூட்டைக்கு மேல் யாருக்கும் தரக்கூடாது. ஆனால், எம்.எல்.ஏ., லெட்டர் பேடில் எழுதி, அவசரமாக சிமென்ட் வேண்டும் என்று கேட்டதால், கொடுத்தோம். இனிமேல் கொடுக்க மாட்டோம். அப்போது இது தான் கடைசி முறை என்று சொல்லிக் கொடுத்தோம், என்றார்.

இ.கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மணப்பாறை தாலுகா தலைவர் தங்கராசு கூறியதாவது:மணப்பாறை பகுதியில் சிமென்ட் எப்போதும் தட்டுப்பாடு உள்ளது. 2008ல் பதிவு செய்த எனக்குக்கூட இன்னும் சிமென்ட் கிடைக்கவில்லை. அரசியல்வாதிகளின் கான்ட்ராக்ட் பணிக்கு மொத்தமாக சிமென்ட் விற்கப்படுகிறது. உண்மையான பயனாளிக்கு சிமென்ட் கிடைப்பதில்லை. முழுக்க, முழுக்க முறைகேடு நடக்கிறது. ஆகையால், மானிய விலை சிமென்ட்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கான்ட்ராக்ட் எடுத்தவர்கள் தான் முழுமையாக பயன் அடைகின்றனர், என்றார்.

Comments