2012ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மத்திய அரசு சார்பில் அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. இதில் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும், துறையை கட்டுப்படுத்தும் அதிகார விபரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 2012ம் ஆண்டு மே மாதம் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சித்துறை சார்பில் மற்றொரு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. அதில் அனைத்து மத்திய அரசு துறைகளும் தங்கள் துறை சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் தகவல் தெரிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக தொழிலாளர் மற்றும் பயிற்சி துறை சார்பில் 3 மாத அவகாசம் அளிக்கப்பட்டது.
இருப்பினும் அரசுக்கு கட்டுப்படும் 18 துறைகள் தவிர மற்ற துறைகளிடன் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதுபற்றி 2013 ஏப்ரல் முதல் தேதியன்று தொழிலாளர் மற்றும் பயிற்சி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அலுவலக குறிப்பில், அரசு சார்பில் தகவல் கேட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை எந்தவொரு தகவலும் அளிக்கப்படவில்லை எனவும், துறை சார்ந்த தகவல்களை உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அமைச்சகங்களின் இந்த தன்னிச்சையான செயல்பாடே அரசிற்கு அவப் பெயரை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பில் கூறியிருப்பதாவது : மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் 50க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் விண்வெளி ஆய்வுத்துறை, தகவல் தொடர்புதுறை, தொழிலாளர் நலத்துறை, இரும்புத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட 18 அமைச்சகங்கள் மட்டுமே அரசின் உத்தரவிற்கு கீழ்படிவதாகவும், மற்ற துறைகள் தன்னிச்சையாக செயல்படுகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, தேர்தல் நிதி ஒதுக்கீடு, அரசு பணியாளர்கள் மீதான ஊழல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் துரிதப்படுத்துவது, பொதுத்துறை செயல்பாடுகள் உள்ளிட்ட அரசு விவகாரங்களில் தலையிட்டு முக்கிய முடிவு எடுத்து வருகிறது.
Comments