மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

மாமல்லபுரம்:புத்த கயா பாரம்பரிய கோவிலில் நடந்த, பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, மாமல்லபுரம் பாரம்பரிய கலைச் சின்னங்களுக்கு, உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பும், கோரிக்கையும் எழுந்துள்ளது.

மாமல்லபுரம், பல்லவ சிற்பக் கலைக்கு புகழ் பெற்றது. இங்குள்ள கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பல்வேறு குடைவரை மண்டபங்கள் என, 32 கலைச் சின்னங்களை, ஐ.நா., சபையின் கலாசார பிரிவு (யுனெஸ்கோ),
சர்வதேச கலாசார சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. இதைக் கண்டுகளிக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து, ஏராளமானோர் வருகின்றனர்.இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, இவற்றை பராமரித்து வரும் நிலையில், இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குடைவரை மண்டப சிற்பங்கள் ஏற்கனவே சிதைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, முறையான கண்காணிப்பும் இல்லை. தற்போது காதலர்கள் பெயர் எழுதுகின்றனர். இளைஞர்கள் தாரில் கிறுக்குகின்றனர். மது அருந்தி, பாட்டில்களை பாறைகளில் உடைக்கின்றனர்.இதன் உச்சகட்டமாக, கடந்த ஏப்ரல் மாதம், வன்னிய விழாவிற்கு வந்தவர்கள், கடற்கரைக் கோவிலில் அத்துமீறி ஏறி, கொடியேற்றி, துவம்சம் செய்தனர். இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில், இத்துறைக்கு போதிய ஊழியர்களை நியமிக்காமல், மத்திய அரசு புறக்கணிக்கிறது.

மாமல்லபுரம் மட்டுமின்றி, தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம், காஞ்சிபுரம் போன்ற பல்வேறு இடங்கள், நம் பண்டைய கலாசாரத்தை உணர்த்துகின்றன. இப்பகுதி கலைச் சின்னங்கள் அழிய நேரிட்டால், நம் சரித்திரத்திற்கே, ஆதாரமற்ற நிலை ஏற்படும்.இங்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளில், 90 சதவீதம் பேர், மாமல்லபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை பார்க்கவே விரும்புகின்றனர். இப்பகுதிகளை பாதுகாக்க, முறையான நடவடிக்கை இல்லை. தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற வட இந்திய தலங்களில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) பாதுகாப்பு வழங்கியுள்ள மத்திய அரசு, தென்னிந்திய தலங்களில், இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல்
புறக்கணிக்கிறது.

இதுகுறித்து, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் கோதண்டபாணி கூறுகையில், ""மாமல்லபுரம் சிற்பங்கள், நம் அரிய பொக்கிஷங்கள். பயங்கரவாதிகளால், இதுபோன்ற கலைச் சின்னங்களும் அழியும் ஆபத்து உள்ளது. மீண்டும் உருவாக்க இயலாத இது போன்ற கலைச் சின்னங்களை பாதுகாக்க, மத்திய அரசு, சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு அளிக்க வேண்டும்,''
என்றார்.

கைவினைப் பொருள் விற்பனையாளர் சிவகுமார் கூறுகையில், ""தற்போது, சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். ஆனால் பாதுகாப்பு தான் இல்லை. பல்லவர்கள், 1,400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய சிற்பங்களால், நமக்கு பெருமை என்பதைபோல், இதை பாதுகாக்கும் கடமையும் உள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும்,'' என்றார்.

சுற்றுலா பயண ஏற்பாட்டாளர் மோகன் கூறுகையில், ""சரித்திர கால கலைச் சின்னங்கள், நம் கலாசார அடையாளம். இதன் மூலம் அன்னிய செலாவணியும் கிடைக்கிறது. வருங்கால தலைமுறையும் அறிய, இவற்றை பாதுகாப்பது அவசியம். இங்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை மூலமான உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிச்சயம் தேவை,'' என்றார்.
Click Here

Comments