கூடங்குளம் முதல் அணுஉலைக்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

புதுடில்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை செயல்பட அணுசக்தி ஒழுங்குமுறை கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.
கூடங்குளத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. முதலாவது அணு உலையில், கடந்த ஆண்டே மின் உற்பத்தி துவக்குவதற்கான பணிகள் நடந்தன.
2012, ஆக., 19ல், செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நடந்தது. 2013, ஜனவரியில், உற்பத்தி துவங்கியிருக்க வேண்டிய நிலையில், இரண்டு வால்வுகளில் கசிவு ஏற்பட்டிருப்பதாக, வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.வால்வுகளை சரி செய்யும் பணிகளில், இந்திய, ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைத்து பணிகளும் முடிந்து, மின் உற்பத்திக்கான, "ஹாட் ரன்' எனப்படும், சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், அணுமின் நிலையம் துவங்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகளுக்குட்பட்ட அணுமின் நிலையத்தை இயக்கும் பணியில் அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இப்பணிகளை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய கீழமட்ட அதிகாரிகள் சிலர், கூடங்குளத்தில் தங்கி, பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில், அணு உலையின் செயல்திறன், பாதுகாப்பு தன்மை குறித்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் திருப்தி தெரிவித்ததுடன், அணுமின் நிலையத்தின் முதல் உலையை இயக்க அனுமதியும் வழங்கியுள்ளது. இதையடுத்து முதல் அணுஉலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments