மோடியால் காங்கிரசுக்கு பித்து பிடித்துவிட்டது: பா.ஜ., விமர்சனம்

டேராடூன்: ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால், காங்கிரஸ் கட்சிக்கு, பித்து பிடித்து விட்டது. அதனால் தான், உத்தரகண்ட் வெள்ள சேதத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மோடி செய்த உதவியை, அம்மாநில அரசு வெளிப்படுத்தவில்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர் திரிவேந்திர சிங் கூறினார்.
பரந்த மனப்பான்மை:

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பரந்த மனப்பான்மையோடு, கணிசமான தொகையை உதவியாக அளித்தார். 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும், ரயில் மூலம், உத்தரகண்டிற்கு அனுப்பி வைத்தார். அத்துடன், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்கவும், இடிபாடுகளை அகற்றவும், குழு ஒன்றையும், மோடி அனுப்பி வைத்தார். ஆனால், அந்தக் குழுவின் சேவை தேவையில்லை என, உத்தரகண்ட் அரசு, திரும்பி அனுப்பிவிட்டது.

மோடி உதவி மறைப்பு:

உத்தரகண்ட் மாநில அரசு நிர்வாகத்தில் உள்ள யாரும், மோடி செய்த உதவிகள் பற்றி, இதுவரை வாய் திறக்கவில்லை. மோடிக்கு சாதகமான, அவருக்கு செல்வாக்கை தேடித் தரக் கூடிய ஒவ்வொரு விஷயத்தையும், உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் அரசு, வேண்டுமென்றே மறைக்கிறது. இதிலிருந்தே, மோடியின் பெயரைக் கேட்டாலே, காங்., பித்து பிடித்தது போலாகி விடுகிறது தெரிகிறது. உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க, 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. ஆனால், 1,000 கோடி ரூபாயை மட்டுமே, மத்திய அரசு அளித்துள்ளது. உத்தரகண்ட் துயரத்தை, தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு திரிவேந்திர சிங் கூறினார்.

Comments