அசாமில் கனமழை: பிரம்மபுத்திராவில் வெள்ளப்பெருக்கு… 350 கிராமங்கள் மூழ்கின

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 11 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அசாமில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் பிரம்மபுத்ரா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அண்டை மாநிலமான அருணாசலபிரதேசத்திலும் கனமழை கொட்டிவருகிறது. இதனால் அபாய அளவை தாண்டி பாயும் பிரம்மபுத்ரா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள ஜோர்ஹத், சிப்சாகர், திப்ருகர், சோனிட்புர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 350 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. சுமார் 1 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

3000 பேரை காணவில்லை பிரம்மபுத்திராவில் பாயும் வெள்ளத்தினால் தேமாஜி மாவட்டத்தில் 25 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கிட்டதட்ட 3000 பேரை காணவில்லை என அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை அடிவாரத்தில் வசிக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விளை நிலங்கள் நாசம் ஜியாதோல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அசாம் மாநிலத்தில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அறுவடையை எதிர்நோக்கி இருந்த நெல், கரும்பு ஆகிய பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 900 நிவாரண முகாம்களில் சுமார் 2 ஆயிரம் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

விலங்குகள் மூழ்கின சுற்றுலா தலமான காசிரங்கா மற்றும் போபிடோரா வனவிலங்கு பூங்காக்களின் உள்ளேயும் வெள்ளநீர் புகுந்ததால் வனவிலங்குகளும் கழுத்தளவு நீரில் மூழ்கியுள்ளன.
போக்குவரத்து பாதிப்பு மாநிலத்தின் 6 பிரதான சாலைகள், ஒரு மேம்பாலம், 3 தரைப்பாலம் ஆகியவை சேதமடைந்ததால் சில பகுதிகளில் உள்ளூர் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடித்தால் நிலைமை மேலும் மோசம் அடையும் என அஞ்சப்படுகிறது. அசாம் மாநில ராஜ்யசபா எம்.பி.யான பிரதமர் மன்மோகன்சிங் மாநில முதல்வர் தருண் கோகாயுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்துள்ளார். நிவாரணப்பணிகளை உடனடியாக முடிக்கி விடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Comments