விருதுநகர்: தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படும் மின் தடையினால்,
தொழில்சாலைகள், சிறு மற்றும் குறுத்தொழில்கள் பாதிக்கப்படுகிறது. மேலும்
குடும்பங்களில் பல வேலைகளை செய்ய முடியாமல் குடும்ப பெண்கள் திணறி
வருகின்றனர். இந்த நிலையில் மின் தடை ஏற்பட்டதால், விருதுநகரில் இரு
குடும்பங்களில் குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டு அளவிற்கு ஒரு சம்பவம்
நடைபெற்றுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு பெட்ரோல்
பங்க் உள்ளது. இங்கு நேற்று இரவு 7 மணி அளவில் இருட்டி இருந்தது. அப்போது
மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, 2 மோட்டர் சைக்கிள்கள்
பெட்ரோல் அடிக்க வந்தது. 2 மோட்டர் சைக்கிள்களில் கணவனும், மனைவியாக
வந்திருந்தனர். மேலும் இரு ஆண்களும் ஒரே மாதிரியாக ஹெல்மேட் மற்றும்
வாகனத்தில் வந்திருந்தனர்.
தமிழகத்தில் மின்சாரம் எப்போது வரும்,
எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது என்பதை நிரூபிக்கும் வகையில்,
திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல்
அடிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கிளம்ப தயாரானார்.
அதை கண்ட
மனைவியும், அவருடன் மோட்டர் சைக்கிளில் ஏறி கொள்ள வண்டி கிளம்பியது.
சாத்தூர் சாலையில் சிறிது தூரம் போன நிலையில், பின்னால் அமர்ந்திருந்த
பெண், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரிடம், என்னங்க! நாம தாதம்பட்டி போகணும்,
நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்கலே என்றார்.
இதில் அதிர்ச்சி அடைந்த
மோட்டர் சைக்கிள் ஓட்டிய நபர், வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்த
போது, இருவருக்கும் அதிர்ச்சி. ஏனெனில் வண்டியை ஓட்டியவர், பின்னால்
இருந்த பெண்ணின் கணவர் அல்ல. இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு கொண்டு,
மீண்டும் மின்தடை ஏற்பட்ட பெட்ரோல் பங்க்கிற்கு விரைந்தனர்.
அங்கு
கணவனை காணாமல் ஒரு மனைவியும், மனைவியை காணாமல் ஒரு கணவனும் தவித்து
கொண்டிருந்தனர். ஜோடி மாறிய இருவரும் நடந்த சம்பவத்தை எடுத்து கூறி,
சரியான ஜோடிகளாக பெட்ரோல் பங்க்கில் இருந்து கிளம்பி சென்றனர். இந்த
சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள், தமிழகத்தில் ஏற்படும் மின் தடையால்
குடும்பத்தில் கூட குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்று
புலம்பினர்.
Comments