சென்னை: சாலை விபத்தில் பலியானவரின் உடல் உறுப்புகளோடு சுடுகாட்டுக்குக்
கிளம்பிய சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கவனக்குறைவாக தலையை தரையில் தவற
விட்டதால் பெரும் பரபரப்பும், பதட்டமும், தேவையில்லாதக் குழப்பமும்
ஏற்பட்டு விட்டது. சிங்காரச் சென்னையில்தான் இந்த சீரான குழப்பம் நடந்தது.
உருண்டு விழுந்த தலை!
சென்னை
வால்டாக்ஸ் ரோட்டில், நேற்று காலை 11.30 மணியளவில் வழக்கம்போல மக்களும்,
வாகனங்களும் படு பிசியாக ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு போய்க்
கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு வாகனத்திலிருந்து தலை ஒன்று தரையில்
உருண்டு விழுந்தது. ஆனால் ஏகப்பட்ட வாகனங்கள் போய்க் கொண்டிருந்ததால்
எதிலிருந்து தலை விழுந்தது என்று தெரியவில்லை.
திடீரென சாலையில்
துண்டிக்கப்பட்ட தலை வந்து விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். வண்டியில்
வைத்தே கொலை செய்ய ஆரம்பித்து விட்டார்களா என்று அவர்கள் பயந்து போயினர்.
இதையடுத்து பொறுப்பான ஒரு குடிமகன், யானை கவுனி காவல் நிலையத்திற்குப்
போனைப் போட்டார். போலீஸார் ஓடி வந்தனர். தலையைக் கைப்பற்றி விசாரணையைத்
தொடங்கினர்.
தலையை ஆராய்ந்த அவர்கள் அது பிரேதப் பரிசோதனைக்குப்
பின்னர் ஒப்படைக்கப்பட்ட உடலுக்குரியதாக இருக்கலாம் என்ற முடிவுக்கு
வந்தனர். எனவே இது கொலையல்ல என்ற முடிவுக்கும் வந்தனர். இதையடுத்து அரசு
பொது மருத்துவமனைக்குத் தலையை அனுப்பி பத்திரப்படுத்தினர்.
எல்லாத்துக்கும் காரணம் அகோரமூர்த்தி!
சரி,
தலை எப்படி ரோட்டுக்கு வந்தது என்ற குழப்பத்திற்கு விடை கிடைக்காமல் யானை
கவுனி போலீஸார் தங்களது தலையை உடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து
சேர்ந்தார் அகோரமூர்த்தி.இவர் வேறு யாருமல்ல, திருமங்கலம் போக்குவரத்து
உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆவார்.
பதட்டத்துடன் வந்த அவர் விபத்தில்
பலியானவரின் உடலைக் கொண்டு சென்றபோது அவரது தலை மட்டும் காணவில்லை என்று
புகார் கொடுத்தார். அகோரமூர்த்தி சொன்னதைக் கேட்டு யானை கவுனி போலீஸார்
திடுக்கிட்டனர். அகோரமூர்த்தி தவற விட்ட தலைதான் தாங்கள் கைப்பற்றியது
என்று அவர்களுக்குத் தெரிய வந்தது.
நடந்தது என்ன..?
கடந்த
ஆகஸ்ட் 30ம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஒருவர் சாலையைக் கடக்க
முயன்றுள்ளார். அப்போது, ஆந்திரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வேன் ஒன்று
அவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஆனால்
பலியானவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.
இதனால். டி.என்.ஏ.
பரிசோதனைக்காக அந்த நபரின் கால்கள் மற்றும் தலையை தனியாக துண்டித்து பிரேத
பரிசோதனை அறையில் வைத்துள்ளனர். உடல் பகுதியை சுடுகாட்டில் போலீசார்
எரித்து விட்டனர். கடந்த 2 மாதங்களாக விபத்தில் பலியானவரை தேடி யாரும்
வராததால், அந்த தலை மற்றும் கால்களை எரிப்பதற்கு திருமங்கலம் போக்குவரத்து
போலீசார் முடிவு செய்தனர்.
பைக்கில் தூக்கிச் செல்லப்பட்ட தலை, கால்
இதற்காக,
உதவி சப்-இன்ஸ்பெக்டர் அகோரமூர்த்தி, அந்த தலை, கால்களை ஒரு வாளியில்
வைத்து துணியால் மூடி, மோட்டார் சைக்கிளில் மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்கு
கொண்டு சென்றுள்ளார். அப்போது மழை நீர் தேங்கி, பள்ளமும் மேடுமாக இருந்த
சாலையில் மோட்டார் சைக்கிளில் போகும்போது, வாளியில் இருந்து தலை மட்டும்
துள்ளி குதித்து கீழே விழுந்துவிட்டது.
சாலையில் தலை மட்டும்
கிடந்ததால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுவிட்டது. அகோரமூர்த்தி வந்து
நடந்ததைச் சொல்லி விளக்கியதைத் தொடர்ந்து அவரிடம் அந்தத் தலையை ஒப்படைத்து
அனுப்பி வைத்தனர் யானை கவுனி போலீஸார்.
அதன் பின்னர் படு பத்திரமாக தலையைத் தூக்கிக் கொண்டு போனார் அகோரமூர்த்தி...!
Comments