ஜெ. நினைத்தால் கூடங்குளம் போராட்டத்தை ஒரே நாளில் ஒடுக்கி விடுவார்- இளங்கோவன்

திருச்சி: முதல்வர் ஜெயலலிதா மட்டும் நினைத்தால், ஒரே நாளில் கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி விடுவார். அதைச் செய்ய அவர் முன்வர வேண்டும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
திருச்சியில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசும்பபோது இவ்வாறு சொன்னார் இளங்கோவன்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒரு குடும்பத்தின் ஆட்சியில் 7 மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட்டதால் தமிழக மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினர்.
மக்களையே தனது குடும்பமாக எண்ணி மக்களின் துயரைப் போக்குவார் என்ற எதிர்பார்ப்போடு ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். ஆனால், தற்போது 14 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் மின்பற்றாக்குறை 3,400 மெகா வாட். கூடங்குளத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கினால் தமிழகத்துக்கு 1,000 மெகா வாட் கிடைக்கும். எனவே, கூடங்குளத்தில் மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் இந்த நாட்டுக்குச் செய்த தொண்டின் காரணமாக மக்களால் இன்றும் போற்றப்படுகின்றனர். அதேபோன்று மக்கள் நலனுக்கான பணிகளை தமிழக முதல்வரும் தனது ஆட்சிக்காலத்தில் செய்ய வேண்டும்.
போலீஸார் நினைத்தால் ஒரு நிமிடத்தில் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தை முடித்து விடுவார்கள். பழிவாங்கும் பணிக்கு போலீஸாரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தமிழக மக்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை ஒடுக்க போலீஸாருக்கு ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.
கூடங்குளம் விஷயத்தில் முதல்வர் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

Comments