தமிழக ரவுடிகள் 'ஸ்டாக் லிஸ்ட்' வெளியீடு.. 16,502 பேர் உள்ளனராம்!

 Chennai Tops Rowdy List மதுரை: தமிழகத்தில் 16,502 ரவுடிகள் உள்ளதாகவும், சென்னையில்தான் அதிக ரவுடிகள் இருப்பதாகவும், 2வது இடம் நெல்லைக்குக் கிடைத்திருப்பதாகவும், மதுரை 3வது இடத்தில் இருப்பதாகவும் தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் கூறியுள்ளார். இதுதொடர்பான பட்டியல் ஒன்றை அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சுப.முத்துக்குமார், கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான
2 பேர் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட வாரியாக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பிக்கு, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் டி.ஜி.பி ராமானுஜம் அறிக்கை தாக்கல் செய்தார்.
டிஜிபி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் 31 மாவட்டங்கள், 6 நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை நம்பர் 1
அதிகபட்சம் சென்னையில் 3,175 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் நெல்லை 2-வது இடத்தில் உள்ளது. நெல்லை நகரில் 334 ரவுடிகளும், புறநகரில் 1214 ரவுடிகளும் உள்ளனர்.
மதுரை 3-வது இடத்தில் உள்ளது. மதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 748 ரவுடிகளும், கோயமுத்தூர் நகரில் 512 ரவுடிகளும், புறநகரில் 226 பேரும் உள்ளனர்.
பிற நகர ரவுடிகள் விவரம்:
சேலம் நகர்-353, சேலம் புறநகர்-299, திருச்சி நகர்-427, திருச்சி புறநகர்-155, திருவாரூர்-84, பெரம்பலூர்-84, காஞ்சீபுரம்-416, திருவள்ளூர்-318, விழுப்புரம்-452, கடலூர்-680, வேலூர்-376, திருவண்ணாமலை-200, ஈரோடு-276, திருப்பூர்-127, நாமக்கல்-308, தர்மபுரி-165, புதுக்கோட்டை-157, கரூர்-143, அரியலூர்-290, தஞ்சாவூர்-584, நாகப்பட்டிணம்-287, விருதுநகர்-655, திண்டுக்கல்-299, தேனி-111, ராமநாதபுரம்-462, சிவகங்கை-214, தூத்துக்குடி-605, நீலகிரி-65.
நீலகிரி மாவட்டத்தில் தான், ரவுடிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
10 ஆண்டுகளில் 17,032 கொலைகள்
குற்றங்களை பொறுத்தவரை 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடந்துள்ளன.
3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சி, சிறு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2 லட்சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவாகும் வழக்குகளில் தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது 2001-ம் ஆண்டு 62.80 சதவீதமாக இருந்தது. 2011-ம் ஆண்டு 62.10 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதி தீர்ப்பை தேதி குறிக்காமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Comments