'ஸ்பெக்ட்ரம்'-நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்!-அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சி எம்பிக்களின் பலத்த எதிர்ப்பு ஷங்களுக்கிடையே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவையில் இந்த அறிக்கையை திமுகவைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் நிதித்துறையின் இன்னொரு இணையமைச்சரான நமோ நாராயணன் மீனா தாக்கல் செய்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் ராசா அவையில் இல்லை.

இன்றும் நாடாளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு:

முன்னதாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஒரு மணி நேர ஒத்திவைப்புக்குப் பின் நண்பகலில் நாடாளுமன்றம் கூடியதும் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சிஏஜி அறிக்கையில், 2008ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலம் விடப்படாததால் அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி:

இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி நிலவி வருவதை தவிர்க்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. ஆனால், இக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் பதவியை ராசா ராஜினாமா செய்த பின்னரும் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக திட்டவட்டமாகக் கூறி வருகிறது. இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. இரு தரப்பும் பிடிவாதமாக இருப்பதால் நாடாளுமன்றம் ஸ்தம்பித்துள்ளது.

எனவே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

இக் கூட்டத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரின. இதை மத்திய அரசு ஏற்க மறுத்தது. இதையடுத்து கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இதனால் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரத்தால் குளிர் கால கூட்டத் தொடர் தொடங்கி ஒரு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை ஒரு நாள் கூட நாடாளுமன்றம் முழுமையாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நாடாளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பாஜக கிளப்பியபோது, கர்நாடக பாஜக ஆட்சியின் சுரங்க ஊழல், நில ஒதுக்கீடு ஊழல் ஆகிய பிரச்சனைகளை திமுக, காங்கிரஸ் ஆகியவை கிளப்பின. இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலக வேண்டும் என்று இந்தக் கட்சிகள் வலியுறுத்தின. இதனால் பெரும் அமளி ஏற்பட்டது.

Comments