ஒரு அமைச்சர் விவகாரத்தால் எல்லாம் கூட்டணி உடையாது-திமுக

சென்னை: ஒரு அமைச்சரின் விவகாரத்தால் எல்லாம் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையாது என்று திமுக கூறியுள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அளித்த பேட்டியில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் ராசாவை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் இந்த விசயத்தில் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாக கூட்டணி அரசில் இருந்து திமுக விலகும் பட்சத்தில் ஆட்சி கவிழாமல் இருக்க காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுக்க அதிமுக தயாராக உள்ளது. காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற்றால், காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க நான் தயார் என்று கூறியுள்ளார்.

இந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது. இந் நிலையில் ஜெயலலிதாவின் அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் ,

எப்படியாவது அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஜெயலலிதா உள்ளார். அவர் எந்த அளவுக்கு ஆதங்கததுடன் உள்ளார் என்பதைத் தான் அவரது இந்த ஆதரவு அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ஒரு அமைச்சரின் விவகாரத்தால் எல்லாம் கூட்டணி உடைந்துவிடாது என்றார்.

சிஏஜி ரிப்போர்ட்டை நம்பினால்...

ஜெயலலிதாவின் ஆதரவு அறிவிப்புக்கு முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. சிஏஜி என்பது ஒரு கணக்கு தணிக்கை அமைப்பு மட்டுமே. இதன் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கிளம்பினால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை பார்க்க முடியாது என்றார்.

சோனியா-பிரதமருடன் கருணாநிதி பேச்சு?:

இதற்கிடையே ராசா விவாகரம் நாடாளுமன்றத்திலும் மிகப் பெரிய அளவில் வெடித்துள்ளதால் இது தொடர்பாக கொரியாவில் சுற்றுப் பயணத்தில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் அவருடனும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் முதல்வர் கருணாநிதி பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.


காங்கிரஸ் மிகவும் நெருக்கினால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ராசாவை நீக்க திமுக அனுமதிக்கலாம் என்று தெரிகிறது.

Comments