திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 6ம்தேதி தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகம் மற்றும் விடுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

6ம் நாளான இன்று (வியாழன்) அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 6 மணிக்கு சாமி ஜெயந்திநாதர் யாகசாலை பூஜைக்கு எழுந்தருளினார். 7 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. இதில் சித்தன் எம்.பி. உட்பட பலர் கலந்துகொண்டனர். காலை 9 மணிக்கு உச்சிக் கால தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரங்களில் வலம் வந்து சண்முகவிலாச மண்டபம் சேர்ந்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ.11) மாலை 4.30 மணிக்கு துவங்கியது. சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் சூரனை வதம் செய்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கோயில் பவர் ஆபீஸ் மற்றும் கலையரங்கம் அருகே எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டன.

இதில் கலையரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள டி.வி.யால் பக்தர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இன்று காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களிலும் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என்ற பக்தி கோஷங்களே கேட்கின்றன.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அறங்காவலர் குழுத்தலைவர் தேவதாசசுந்தரம், அறங்காவலர்கள் சந்திரசேகரன், படிக்காசு, தங்கத்துரை, திலகவதிபாலன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். சூரசம்காரத்தையொட்டி எஸ்பி கபில்சாரட்கர் தலைமையில், டிஎஸ்பி அப்பாசாமி மேற்பார்வையில் 1900 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ் கள் இயக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு

கந்தசஷ்டி விழா தொடர்பாக கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவ தாக கூறியிருந்தனர். அதன்படி லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்தாலும் கோயிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரணம் அவர்கள் சொன்னதுபோன்று செய்யவில்லை குறைவாகத் தான் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே பக்தர் கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Comments