மறுவிசாரணை நடத்த வேண்டும்: அஜ்மல் கசாப் கோரிக்கை

மும்பை : மும்பை தாக்குதல் வழக்கை சிறப்பு கோர்ட் நியாயமாக விசாரிக்கவில்லை என்றும், எனவே மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் பயங்கரவாதி அஜ்மல் கசாப் கோரியுள்ளான்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவ., 26ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர சம்பவத்தில் 166 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய ஒன்பது பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு பயங்கரவாதி மட்டுமே உயிருடன் பிடிபட்டான். அவனுக்கு மும்பை சிறப்பு கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கசாப் மேல் முறையீடு செய்துள்ளான். இந்நிலையில், மும்பை தாக்குதல் வழக்கை சிறப்பு கோர்ட் நியாயமாக நடத்தவில்லை என்றும், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றும் கசாப் கோரிக்கை விடுத்து உள்ளான்.

மும்பை ஐகோர்ட்டில், கசாப் மேல்முறையீட்டு மனு மீது விவாதங்கள் நடந்தன. அப்போது, கசாப்புக்காக ஆஜரான வக்கீல் அமின் சோல்கர், மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டு கசாப்புக்கு வக்கீல்கள் நியமிக்கப்படவில்லை என்றும், கசாப்புக்கு எதிரான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். சோல்கர் மேலும் கூறியதாவது: மும்பை தாக்குதலுக்கு முந்தைய தினம், தெற்கு மும்பையில் உள்ள மீனவ காலனி வழியாக ஒன்பது பயங்கரவாதிகள், மோட்டார் படகு மூலம் மும்பைக்கு வந்தனர். அவர்களை, அனிதா உதயா என்ற பெண் பார்த்ததாகக் கூறபடுகிறது. நேரடி சாட்சியான இவர், வழக்கு விசாரணையின் போது விசாரிக்கப்படவில்லை. பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பின், அவர்களது உடல்களை மருத்துவமனையில் அனிதா அடையாளம் காட்டினார், என்றார்.

Comments