முதல்வர் பதவிக்காக என்.டி.ராமராவை கொலை செய்தவர் சந்திரபாபு நாயுடு: ரோசய்யா

ஹைதராபாத்: முதல்வர் பதவிக்காக மாமனார் என்.டி.ராமராவை கொலை செய்தார் சந்திரபாபு நாயுடு என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ரோசய்யா ஒரு ஊழல்வாதி. அவருக்கு நிர்வாகத் திறன் இல்லை. இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஆந்திராவுக்கு அழைத்து வர அவர் முயலவில்லை என்று அன்மையில் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் ரோசய்யா பேசுகையில்,

என் மேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த சந்திரபாபு நாயுடுக்கு எந்த தகுதியும் இல்லை. நான் பணம் படைத்த குடும்பத்தில் பிறந்தவன். ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

சந்திரபாபு நாயுடு தான் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அரசியலுக்கு வந்த பிறகு தான் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. இவற்றை அவர் எப்படி எல்லாம் சம்பாதித்தார் என்று மக்களுக்குத் தெரியும்.

தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக சொந்த மாமனாரான என்.டி.ராமராவை கொலை செய்தார். கொலை குற்றவாளியான அவர் என்னை ஊழல்வாதி என்று சொல்லி மக்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார். அவரைப் பற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. மக்களே அவரை நன்கு அறிவார்கள் என்று அவர் கூறினார்.

ரோசய்யாவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டினால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments