ஸ்பெக்ட்ரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அவசியம்-ஜெயலலிதா

சென்னை: இதுவரை நடந்த அனைத்து ஊழல்களுக்கும் 'தாயான' 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து முறையாக ஆய்வுசெய்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே முடியும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒதுக்கித் தள்ளி இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தவறான கொள்கையை கடைபிடித்ததன் மூலம் இந்திய தேசத்திற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் அளவிற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதை பொதுக் கணக்குக் குழு தானாகவே பரிசீலனை செய்ய உள்ளதால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை என்பது தேவையற்றது என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.
ஏனெனில், ராசா மட்டுமல்ல, மத்திய அரசே சிக்கித் தவிக்கும் இந்தப் பிரச்சனையில் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்காததை பிரதிபலிக்கும் விதமாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது.

இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சனையை பொதுக் கணக்குக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்பது நாடாளுமன்ற நடைமுறையில் சாதாரணமாக கடைபிடிக்கப்படும் வழக்கம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால், ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ஊழல் என்பது சாதாரண ஒன்றல்ல. குறைந்தபட்சம் சொல்ல வேண்டுமென்றால் இந்த ஊழல் அசாதாரணமான ஒன்று. எனவே, இது முறையாக கையாளப்பட வேண்டும். இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மட்டுமே சரியானதாக இருக்கும்.

பொதுக் கணக்குக் குழுவின் எல்லை சில வரையறைகளுக்கு உட்பட்டது. கணக்கு வழக்குகளில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின், அதனை மட்டுமே பொதுக் கணக்குக் குழுவினால் பரிசீலிக்க இயலும். வழக்கு தொடர்வதற்கான பரிந்துரையை பொதுக் கணக்குக் குழுவினால் செய்ய இயலாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை என்பது இதையும் தாண்டி பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.

தகுதியற்ற, திறமையற்ற, தொலைத்தொடர்பு துறைக்கு தொடர்பு இல்லாத லெட்டர் பேட் கம்பெனிகளுக்கு குறைந்த விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக, ரூ 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி அளவுக்கு தேசத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து ஊழல்களுக்கும் தாயான இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் சதிகாரர்களுக்கு எதிராக இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?. இவையெல்லாம் பொதுக் கணக்குக் குழுவின் வரம்பிற்கு அப்பாற்பட்டவை. இந்தக் கோணங்களில் எல்லாம் ஆய்வு செய்து முறையான மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவினரால் மட்டுமே முடியும்.

பொதுக் கணக்குக் குழுவை விட, நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்பது மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அதிகப் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாகும். அரசு அதிகாரிகளை மட்டுமல்லாமல், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் விசாரணைக்கு அழைக்கக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு மட்டுமே உண்டு.

திமுகவைத் தவிர, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கைகள் சுத்தம் என்பதில் தெளிவாக இருந்தால், ஏன் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பார்களேயானால், அவர்களுக்கும் இந்தச் சுரண்டலில் பங்கு இருக்கிறது என்ற முடிவுக்குத் தான் மக்கள் வர வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Comments