நடப்பு நிதி ஆண்டில், நவம்பர் 15-ந் தேதி வரையிலான காலத்தில் நாட்டிலுள்ள 23 முன்பேர வர்த்தக சந்தைகளில் நடைபெற்றுள்ள வர்த்தகம் ரூ.67.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.43.20 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, முன்பேர சந்தைகளின் வர்த்தகம் 55 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என ஃபார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எஃப்.எம்.சி) தெரிவித்துள்ளது. தங்கம், வெள்ளி, இதர சாதாரண உலோகங்கள் மற்றும் எரிபொருள்கள் மீதான வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்ட விறுவிறுப்பே இந்த அபார வளர்ச்சிக்கு காரணமாகும். கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில் தங்கம், வெள்ளி வாயிலான வர்த்தகம் 84 சதவீதம் உயர்ந்து ரூ.30.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.16.30 லட்சம் கோடியாக இருந்தது. இதர சாதாரண உலோகங்கள் மீதான வர்த்தகம் 66 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.9.65 லட்சம் கோடியிலிருந்து ரூ.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் போன்ற எரிபொருள்கள் மீதான வர்த்தகம் 28 சதவீதம் அதிகரித்து ரூ.13.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வேளாண் விளைபொருள்கள் மீதான வர்த்தகம் 12 சதவீதம் அதிகரித்து ரூ.7.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் தேசிய அளவில் 5 முன்பேர வர்த்தக சந்தைகளும், மண்டல அளவில் 18 சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. நவம்பர் 1 முதல் 15-ந் தேதி வரையிலான இரண்டு வாரங்களில் இந்த சந்தைகளின் மொத்த விற்றுமுதல் ரூ.5.49 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே 15 தினங்களில் ரூ.3.16 லட்சம் கோடியாக இருந்தது. இது 74 சதவீத வளர்ச்சியாகும். அக்டோபர் மாதத்தில், 23 சந்தைகளில் ரூ.9.89 லட்சம் கோடி மதிப்பிற்கு வர்த்தகம் இருந்தது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட 54.31 சதவீதம் (ரூ.6.40 லட்சம் கோடி) அதிகமாகும். சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில், தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம் ரூ.2.45 லட்சம் கோடி மதிப்பிற்கு இருந்தது. இது, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் 93 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.4.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என எஃப்.எம்.சி. அமைப்பு தெரிவித்துள்ளது. அம்மாதத்தில் வேளாண் விளைபொருள்கள் மீதான முன்பேர வர்த்தகம், ரூ.1.04 லட்சம் கோடியிலிருந்து ரூ.1,06,149 கோடியாக உயர்ந்துள்ளது.
Comments