பச்சிளம் குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூர தாய் : மும்பையில் பரிதாபம்

மும்பை : மும்பையில் மருத்துவமனையில் இருந்த ஜன்னல் வழியாக பெண் சிசுவை தூக்கி எறிந்த தாயின் கொடூர செய்கை சி.சி.டி.,வியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் நலப்பிரிவில் தீபிகா என்ற பெண் ஒன்றரை மாதமே ஆன தனது இரட்டைக் குழுந்தைகளை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இரண்டு குழந்தைகளும் குறைப்பிரசவத்தில் பிறந்ததால் மிகவும் எடை குறைவாக இருந்தன. இவற்றில் ஒன்று ஆண் குழந்தை, ஒன்று பெண் குழந்தை.
குழந்தையை "காணவில்லை" : இந்நிலையில் தீபிகா திடீரென தனது பெண் குழந்தையை காணவில்லை என கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். திகைத்துப் போன மருத்துவமனை நிர்வாகம் சி.சி.டி., வி கேமரா பதிவை பார்த்துள்ளது. அப்போது தீபிகா வார்டில் இருந்து தனது பெண் குழந்தையை டவலில் சுற்றி எடுத்துக் கொண்டு கழிப்பறைக்குள் நுழைவது பதிவாகியிருந்தது. ஆனால் வெளியில் வரும் போது தீபிகா கையில் குழந்தை இல்லை. சுதாரித்துக் கொண்ட நிர்வாகம் தீபிகாவி‌டம் தீவிரமாக விசாரிக்க பெண் குழந்தையை தான் ஜன்னல் வழியாக ‌வெளியே தூக்கி எறிந்ததாக தெரிவித்தார் தீபிகா. மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு கொண்டு வந்தனர். ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்டதால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் எலிகள் கடித்து குழந்தையின் தலையில் காயங்களை ஏற்படுத்தியிருந்தன. தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீபிகாவின் மற்றொரு குழந்தை சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை முடிந்ததும் தீபிகா கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர். தீபிகாவின் கணவர் இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும். பெண் குழந்தை என்று தான் எப்போதும் பேதம் பார்த்ததில்லை என்றார். இருப்பினும் தனது மனைவியின் செயல் அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.

Comments