தேனி மாவட்ட மலை பகுதிகளில் நக்சலைட் தேடுதல் வேட்டை

பெரியகுளம் : தேனி மாவட்டம் அகமலை வனப்பகுதியில் நக்சலைடுகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று போலீசார் வனப்பகுதியில் சோதனை நடத்தினர்.பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதிகளில், 2007 ஜூன் 26ல் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட நக்சலைட் தலைவன் சுந்தரமூர்த்தி, வேல்முருகன், பழனிவேல், முத்து செல்வம், பாலன், காளிதாஸ், சேகர், கார்த்தி, ஈஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.போலீசாரின் தொடர் சோதனையில் கொடைக்கானல் மலை பகுதியில், 2008 ஏப்ரல் 18ல் நக்சலைட் நவீன்பிரசாத் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது உடனிருந்த கூட்டாளிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மலைப் பகுதிகளில் போலீசார் அவ்வப்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பேரிஜம் ஏரிப்பகுதிக்கும், அகமலை வனப்பகுதிக்கும் இடையே வேற்று மொழி பேசிய, ஆறு நபர்களின் நடமாட்டம் இருப்பதாக அகமலை பகுதி மக்கள் நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல்கள் கொடுத்தனர்.இதை தொடர்ந்து அகமலை, கன்னக்கரை, சொக்கன்அலை, பட்டூர், மதிகெட்டான்சோலை, சோத்துப்பாறை, வருஷநாடு ஆகிய மலை கிராமங்களில் சோதனை நடத்தினர். அதிரடிப்படை எஸ்.பி., கருப்பசாமி, கியூ பிரிவு டி.எஸ்.பி., ஜெயராமன் ஆகியோர் தலைமையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் கொட்டும் மழையிலும் சோதனை மேற்கொண்டனர்.

Comments