"மீண்டும் முதல்வராவது என் கையில் இல்லை' : முதல்வர் பேச்சு

சென்னை : ""ஆறாவது முறையாக மீண்டும் முதல்வராவது என் கையில் இல்லை. அது, ஏழை, எளிய மக்களின் கையில் உள்ளது,'' என, முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழ்நாடு கட்டுமான உயர் பயிலகத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் நிபந்தனையின்றி சேர்ந்து கொள்வதற்காக அனுமதியளித்த, முதல்வருக்கு நன்றி பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

முதல்வர் கருணாநிதி பங்கேற்று, செங்கல்பட்டில் 50 கோடி ரூபாயில் அமையவுள்ள, தமிழ்நாடு கட்டுமான உயர் பயிலகத்தின் அடிக்கல்லை நாட்டி பேசியதாவது:இந்த நன்றி பாராட்டும் விழாவின் போது மழையும் வந்திருக்கிறது. நாம் விரும்பும்போது வந்த மழை இது. "மழையில்லாமல் ஆறுகள், அணைகளில் தண்ணீர் இன்றி, விளைச்சலின்றி, வறட்சி ஏற்படும்; இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு கிளம்பும்' என சிலர் எண்ணிய நேரத்தில் வந்த மழை இது."காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டேன்' என சொன்ன கர்நாடகம் கூட திறந்து விட்டே ஆக வேண்டும் என்ற நிலையில், அணைகள் நிரம்பி வழிவதால், இந்த மழைக்கு நன்றி சொல்ல வேண்டும். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், நல வாரியத்தைச் சேர்ந்த இரண்டு கோடியே ஒன்பது லட்சத்து 89 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மூன்று மாத குழந்தை முதல் முதியவர் வரை சிகிச்சை பெற்றுள்ளனர்.இப்படிப்பட்ட திட்டத்தை, அரசியல் காரணத்துக்காக இழித்தும், பழித்தும் பேசுவோர் நலம் பெற என்ன திட்டம் அறிவிப்பது? உடல்நலம் கெட்டால் காப்பாற்றலாம்; மன நலம் கெட்டால் எப்படி காப்பாற்ற முடியும்.

ஒரு அரசு என்றால், ஒருவரை மாற்றி இன்னொருவர் அமர வேண்டும் என்ற நிலை எடுத்தால் என்ன செய்வது. ஒரு கட்சியே முதல்வராக இருக்க வேண்டும் என்றில்லை; பலரும் முதல்வராகலாம். ஜனநாயகத்தை நான் ஒத்துக் கொள்கிறேன். அதற்கென ஒரு வழி இருக்கிறது."யாரை முதல்வராக ஆட்சியில் வைக்க வேண்டும்' என மக்கள் சொல்வதாக இருந்தால் அதுதான் ஜனநாயகம். ஆனால், ஒரே நாளில் முதல்வர் ஆக நினைக்கக் கூடாது; ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக்கக் கூடாது."ஆறாவது முறையும், நான்தான் முதல்வராக வர வேண்டும்' என்று இங்கே சொன்னார்கள்; அது என் கையில் இல்லை; ஏழை, எளிய, பாட்டாளிகளான நாட்டு மக்கள் கையில் உள்ளது.நானும் வாயில் தங்க கரண்டியையோ, கழுத்தில் முத்துமாலையையோ கொண்டு பிறந்தவன் அல்ல. ஏழை பெற்றோருக்கு மிக, மிக பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவன்.

என் பள்ளி தோழர் முடி திருத்தும் தொழிலாளி தான். என் வீட்டிலேயே அழகிரிக்கு, ஆதிதிராவிட பெண்ணையும், பேத்தி தேன்மொழிக்கு அருந்ததியின டாக்டரையும் கலப்புமணம் முடித்து வைத்துள்ளேன்.எனவே, தொழிலாளர்களின் வாழ்த்துக்களை போற்றி வைத்து, நீங்கள் காலால் இடும் கட்டளையை தலையால் முடிப்பவனாக இருப்பேன். முதல்வர் என்ற ஆணவத்தால், அகம்பாவத்தால், கர்வத்துடன் உங்களை பார்க்காமல் தோழனாய், தொண்டனாய், உடன்பிறப்பாக உங்களோடு இருப்பேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Comments