எல்லாரும் ஏற்கும் வகையில் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு : மூன்று பேர் குழு ஆர்வம்

ஜம்மு : ""காஷ்மீர் பிரச்னைக்கு புதிய தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அது, எல்லா மதத்தினரும், மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்,'' என பத்திரிகையாளர் திலீப் பட்கான்கர் கூறினார்.

காஷ்மீரில் நிலவும் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, அங்குள்ள அனைத்து தரப்பினரிடமும் கருத்துக் கேட்பதற்காக, பத்திரிகையாளர் திலீப் பட்கான்கர் தலைமையிலான மூன்று பேர் குழுவை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. ஜம்முவில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் செய்த இக்குழு, அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசியது. டில்லி செல்லும் முன், ஜம்முவில் நிருபர்களிடம் குழுத்தலைவர் திலீப் பட்கான்கர் கூறியதாவது: மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையிலேயே, பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும். அந்தவகையில், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது, எல்லா மதத்தினரும், எல்லா பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை எங்கள் பயணம் இப்போதுதான் துவங்கியுள்ளது. இது ஒரு மிக நீண்ட, சிக்கல் நிறைந்த பிரயாணமாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை சந்தித்து பேசமுடியவில்லை. ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் நாங்கள் சேகரித்த விவரங்களை அரசிடமும், எதிர்க்கட்சிகளிடமும் தெரிவிப்போம். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடமும் இது குறித்து ஆலோசிக்க தேதி கேட்டுள்ளோம். எங்களை அழைக்காத பட்சத்தில் நாங்களாக சென்று யாருடனும் பேசமாட்டோம். எங்களுடன் பேசுவதற்கு யார் தயாராக இருந்தாலும் அவர்களுடன் பேச நாங்களும் தயாராக இருக்கிறோம். கட்டாயம் அல்லது வற்புறுத்தலின் பேரில் சிலர் பேச்சுவார்த்தைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், இது ஒரு தொடர் பயணம், இதன் பலனை அடைய பல நாட்கள் ஆகலாம். இவ்வாறு திலீப் கூறினார்.

மற்றொரு உறுப்பினர் ராதாகுமார் கூறுகையில், "இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என, ஒருபோதும் நான் தெரிவிக்கவில்லை. நான் அவ்வாறு சொன்னதாக திரித்து கூறப்படுகிறது. காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு புதிய தீர்வு காண எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் பார்லிமென்டும் அதை மகிழ்ச்சியுடன் பரிசீலிக்கும்,'' என்றார்.

Comments