புதுடில்லி : குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா, இன்றைக்குள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்; குஜராத்திற்கு வெளியே தங்கியிருக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டது.குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரும், அவரின் மனைவியும் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவை கைது செய்தது. முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரான அமீத் ஷாவிற்கு, குஜராத் மாநில ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது.இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி, சி.பி.ஐ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி அப்டாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச், "31ம் தேதி காலைக்குள் குஜராத் மாநிலத்தை விட்டு, அமீத் ஷா வெளியேற வேண்டும். மறு உத்தரவு வரும் வரை அவர் குஜராத்திற்கு வெளியே தங்கியிருக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, வரும் 15ம் தேதி நடைபெறும்' என உத்தரவிட்டது.
Comments