மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கேட்போம்: பா.ம.க., ராமதாஸ்

ராஜபாளையம் : "தமிழகத்தில் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை; இம்முறை பா.ம.க.,விற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதால் தென்மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கேட்போம்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

விருதுநகர் மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டம் ராஜபாளையத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்க வந்த ராமதாஸ் கூறியதாவது: ஆற்றுநீர் பிரச்னைகளில் பிற மாநிலங்கள் சந்திக்காத கொடுமைகளை தமிழகம் சந்தித்து, வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பெரியாறு, பாலாறு, காவிரி உரிமைகளை இழந்து வருகிறோம். உலகிலேயே நீண்ட காலமாக தீர்க்கமுடியாத நதிநீர் பிரச்னையாக, காவிரி உள்ளது. 1968 லிருந்து 10 பிரதமர்கள், தமிழகத்தில் ஐந்து முதல்வர்கள், கர்நாடகாவில் 11 முதல்வர்கள் காவிரி பிரச்னையை சந்தித்துள்ளனர். மத்தியில் ஆண்ட தேசிய கட்சிகள், கர்நாடகாவில் தங்கள் கட்சி நிலையை கருத்தில் கொண்டு, காவிரி பிரச்னையில், தமிழக நலனை புறக்கணித்தனர்.

1965க்கு பின், உரிமைக்காக போராடும் குணத்தை, நாம் இழந்து விட்டோம். கேரளாவில் வீணாகும் நதிநீரை பம்பை, அச்சன்கோவில் வழியாக கொண்டு வரும் வைப்பாறு திட்டத்தை செயல்படுத்தினால், கேரளத்திற்கு மின்சாரம் கிடைக்கும், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கேரளாவிற்கு செல்லும் மண், அரிசியை தடுத்தால், அந்த அரசு கட்டுப்படும்.தேர்தல் கூட்டணி பற்றி ஜனவரி, பிப்ரவரியில் முடிவு செய்யப்படும். தென்மாவட்டங்களில் கட்சி வளர்கிறது. இங்கிருந்து பா.ம.க.,வுக்கு வெற்றி கிடைக்கும். அதற்காக மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கேட்போம், என்றார்.

Comments