இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் பொறுப்புடன் நடக்க சீனாவுக்கு இந்தியா கோரிக்கை

ஹனோய்: இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் சீனா பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

வியட்நாமில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் ஹனோய் சென்றுள்ளார். அங்கு மாநாட்டுக்கு இடையே சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசினார். முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது காஷ்மீருக்கு தனி விசா தருவது, எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர், வென்னுடன் விவாதித்தார்.

காஷ்மீருக்குத் தனி விசா தரும் சீனாவின் போக்குக்கு அப்போது பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது.

இந்தியா தொடர்பான முக்கியப் பிரச்சினைகளில் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடக்க சீனா முன்வர வேண்டும் என்று சீனப் பிரதமரை அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளும் தத்தமது எல்லைக்குள் சுதந்திரமாக உலக அரங்கில் செயல்படுவதற்கு போதுமான வாய்ப்புகளும், வழிகளும் உள்ளதை ஜியாபோவிடம் பிரதமர் சுட்டிக் காட்டினார். இதை சீனப் பிரதமரும் ஏற்றுக் கொண்டார். மேலும் இரு நாடுகளும் உலக அரங்கில் இணைந்து செயல்படவது எனவும் ஒத்துக் கொண்டன.

பேச்சுவார்த்தையின்போது தான் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக ஜியாபோ தெரிவித்தார். இதை பிரதமர் வரவேற்றார்.

மேலும், வருகிற நவம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் சீனா செல்வது எனவும், அதன் பின்னர் ஜியாபோவின் வருகைக்கு முன்பாக இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்கும் எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவது என்றும் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டது.

காஷ்மீரை தனி நாடு போல சீனா பாவித்து வருகிறது. அதை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க மறுத்து, காஷ்மீரிலிருந்து வருவோருக்கு தனி விசாவை அளித்து இந்தியாவை கடும் எரிச்சலுக்குள்ளாக்கி வருவது நினைவிருக்கலாம்.
 
கடந்த ஜூலை மாதம் வடக்கு ஏரியா பகுதி ராணுவ அதிகாரி ஜஸ்வால் சீனா செல்ல விண்ணப்பித்தபோது அவருக்கு தனி விசாவை அளிக்க முடிவு செய்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது நினைவிருக்கலாம்.

இதையடுத்து ஜஸ்வாலின் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

Comments