வாஷிங்டன் : ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற சரக்கு விமானங்களில், வெடி பொருட்கள் அடங்கிய பார்சல்கள் இருந்தது, பிரிட்டன் மற்றும் துபாய் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."இது பயங்கரவாதிகளின் சதித் திட்டம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்கள், நேற்று பிரிட்டன் கிழக்கு மிட்லண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்த பார்சல்கள் அனைத்தையும், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு பார்சலில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வெடிபொருள் பார்சல், அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்த தகவல் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.இதேபோல், துபாயிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட இருந்த "பெட்எக்ஸ்' நிறுவனத்தின் சரக்கு விமானத்திலும் அதே வகையான வெடிபொருள் பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சலும் ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்த தகவலும், அமெரிக்க அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
Comments