கொச்சி அணிக்கு 30 நாட்கள் அவகாசம்: பி.சி.சி.ஐ., நோட்டீஸ்

புதுடெல்லி: உரிமையாளர் சர்ச்சைக்கு முடிவு காண கொச்சி அணிக்கு 30 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. 30 நாளில் தீர்வு காணாவிடில் அணியின் ஒப்பந்தம்  ரத்து செய்யப்படும் என்று நிர்வாகக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொச்சி அணியை நிர்வகிப்பது குறித்து உரிமையாளர்களுக்குள் சர்ச்சை நிலவுகிறது.

ஐ.பி.எல். அமைப்பின் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் அதிரடியாக நீக்கப்பட்டன. புதியதாக சேர்க்கப்பட்ட கொச்சி அணியும் இதே போல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அவகாசம் கேட்டு கொச்சி அணி சார்பில் கோரப்பட்டது.


இந்நிலையில் கொச்சி அணி விவகாரத்தில் இறுதி முடிவு செய்ய ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தின் கூட்டம் நாக்பூரில் இன்று நடந்தது.
கொச்சி அணியின் பங்குகள் மற்றும் உரிமையாளர்கள் குறித்து தகவல் அளிக்க, பி.சி.சி.ஐ., நோட்டீஸ் அனுப்பியும் முறையான பதிலளிக்காதது ஐ.பி.எல்., கவர்னிங் கவுன்சிலில் ஆலோசிக்கப்பட்டது.

தங்கள் அணியில் ஏற்பட்ட பிரச்னைகளை தீர்க்க கூடுதலாக கால அவகாசம் தரும் படி, பி.சி.சி.ஐ.,யிடம் கொச்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கெய்க்வாட் அனுமதி கேட்டிருந்தார். இதில் கொச்சி அணிக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுத்து இறுதி கெடு விதித்து நோட்டீஸ் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Comments