தமிழ்நாட்டில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மாதம் பெய்த மழையை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். கடந்த மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக்ஜாம் புயல் கனமழையைக் கொடுத்தது.
மிக்ஜாம் புயல் சென்னையில் கரையைக் கடக்கவில்லை என்றாலும், அது சென்னைக்கு அருகே நீண்ட நேரம் நிலை கொண்டதே மழை கொட்டி தீர்க்க காரணமாகும். கடந்த மாத இறுதியில் தென்தமிழகத்திலும் இதே நிலை. மழை: தென்தமிழகத்தில் பல மணி நேரம் நின்று பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நீர் வடியவே ஓரிரு நாட்கள் ஆனது. தமிழகம் இப்படி ஒரே மாதத்தில் இரண்டு பகுதிகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு மழை பெரியளவில் இல்லாமலேயே இருந்தது. அடுத்த 3 மணி நேரம்: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Comments