அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு : அதிர்ச்சியில் எடப்பாடி, குசியில் பன்னீர்

சென்னை: வரும் 11 ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் விறு, விறுப்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. முடிவில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு 4 கேள்விகளை முன்வைத்துள்ள நீதிபதி, வழக்கை நாளை (ஜூலை 08) பிற்பகல் 2:15க்கு ஒத்திவைத்தார்.

கோர்ட்டில் நடந்த விவாதம் வருமாறு:

ஓ.பன்னீர்செல்லவம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் :
பொதுக்குழு நடக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதே நான் என்ன உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பினார். பொதுக்குழு நடத்தலாம் என்றாலும் தடை கோரி தனி நீதிபதி கொண்ட கீழ் கோர்ட்டை அணுகலாம் என்று தான் உத்தரவிடப்பட்டுள்ளது.சட்ட விதிகளின்படியே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. எனவே கட்சி விதிகளை மீறி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது . என்பது தான் எங்களின் வாதம் . 11 ம் தேதி நடத்தப்படும் பொதுக்குழுவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையே நாங்கள் கேள்வியாக எழுப்புகிறோம். இதற்கான நோட்டீஸ் செல்லுமா என்று தான் கேட்கிறோம். மேலும் பொதுக்குழு தொடர்பான தடை கோரிய காரணங்கள் எந்த கோர்ட்டுக்கும் செல்லவில்லை. தலைமைக்கழக நிர்வாகிகள் என்ற அமைப்பே கட்சி சட்ட விதியில் இல்லை. கோர்ட்டில் தெரிவித்த தீர்மானங்களும், பொதுக்குழுவில் வைத்த தீர்மானங்களும் முரணாக இருந்தன. கடந்த 23 ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. பொதுக்குழு நோட்டீசில் யாருடைய கையெழுத்தும் இல்லை. இவ்வாறு வாதிட்டார்.

பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிடுகையில் : பொதுக்குழு கூட்டியதில் எவ்வித சட்ட மீறலும் இல்லை. மற்ற நிவாரணம் கோரலாம். தடை கோர முடியாது என்று கூறி விட்டது. என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதனால் பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது என்றார். இது தொடர்பான மனுவுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் கோரினர்.

யார் பொதுக்குழுவை கூட்டுவது?

இதனை கேட்ட நீதிபதி, பொதுக்குழு நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று கேட்கலாமே என்று நீதிபதி கூறினார். பொதுக்குழுவுக்கு தடை கோருவதை விட வேறு நிவாரணம் கேட்கலாமே, தடை கோருவதை தவிர்க்கலாமே என்றும் கூறினார். அனைத்து கூட்டங்களுக்கும் முறையான நோட்டீஸ் நடத்தப்பட்டு தான் நடத்தப்படுகிறதா ? பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். இருவரும் இல்லாத போது யார் பொதுக்குழுவை கூட்டுவது? இவர்கள் இல்லையென்றால் கட்சி நடத்த முடியாதா ? இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‛செப்டம்பர் 2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது. 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது. வெற்றிப்படிவம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் கருத்தில்கொண்டே தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தை சுட்டிகாட்டி தனது வாதத்தை நிறைவு செய்தது.

பொதுச்செயலாளர்

பின்னர் தங்களது தரப்பு வாதத்தை தொடர்ந்த பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், ‛பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கூடாது. உச்சநீதிமன்றம் பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நிலையில், அதனை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தலைமை கழக நிர்வாகிகள் பெயரில் தான் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே பொதுக்குழு கூடுகிறது. தற்காலிக பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படும். அதில் ஓபிஎஸ்., உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஜூலை 11ல் நடைபெற உள்ளது அதிமுக.,வின் சிறப்பு பொதுக்குழு' எனக் கூறினார்.

இதற்கு நீதிபதிகள், ‛ஜூன் 23ம் தேதியுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை. பதவி காலாவதியாகாத நிலையில் ஜூலை 11ல் பொதுக்குழுவிற்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும்?' எனக் கேள்வி எழுப்பினார்.

பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், ‛3 நாட்கள் அவகாசம் கொடுத்தால் விரிவான பதில் தாக்கல் செய்கிறோம். பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டா்ம, மற்றவை குறித்து பிறகு ஆய்வு செய்யலாம். கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே தான் பொதுக்குழுவை கூட்டியுள்ளோம். பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை விடுத்து, மற்ற நிவாரணங்களை கோரலாம். ஓபிஎஸ் மனு விசாரணைக்கு உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும். பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மனுதாரராகவும், எதிர் மனுதாரராகவும் உள்ளார். கட்சியின் நலனுக்காக என பேசும் ஓபிஎஸ் எதிர்மனுதாரர் ஆனது எப்படி? ஒருவரே மனுதாரராகவும், எதிர் மனுதாரராகவும் உள்ள வழக்கை எப்படி விசாரிக்க முடியும்?' எனத் தெரிவித்தார்.

4 கேள்விகள்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‛எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது எனில், எவ்வாறு காலாவதியானது? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு உள்ளது? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? இந்த 4 கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும்' என பழனிசாமிக்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நாளை பிற்பகல் 2:15 மணிக்கு ஒத்திவைத்தார்.

Comments