கொரோனா : ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒளிந்திருக்கும் ஒரு சென்னை : விழித்து கொள்ளுமா தமிழக அரசு?

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம், நமது நாட்டிலும் தனது ஆதிக்கத்தை வேகமாக நிலைநிறுத்தி வருகிறது. மார்ச் மாதம் தொடர்ந்து இன்று வரை அமுலில் இருக்கும் ஊரடங்கின் நோக்கம் சிறிதும் நிறைவேறாத நிலையில், மேலும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறது கொரோனா பரவல். 

“தமிழகத்திற்கு கொரோனா வராதுங்க...”-ன்னு சட்டசபையில் கேலியாக பேசிய தமிழக முதல்வரையே இன்று கொரோனா படு சீரியசாக மாற்றி இருக்கிறது. பல அடுக்கு ஊரடங்கு, மருத்துவ குழு, ஆராய்ச்சி என கொரோனாவை கட்டுப்படுத்த தொடந்து போராடும் தமிழக அரசின் முயற்சிக்கு தக்க பலன் கிடைத்தபாடில்லை. 

ஆனால், கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முறையாக செயல்படுத்துகிறதா?. இந்த கேள்விக்கு, இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை பார்க்கும் போது, இல்லை என்றே ஆணித்தரமாக கூற வேண்டும். சென்னை உட்பட மாநிலத்தின் அனேக பகுதிகளில் கொரோனா பரவுதல் பலமடங்கு அதிகரித்திருப்பதே இதற்கு சாட்சி. இறப்பு விகிதம் வல்லரசு நாடுகளை விட மிக குறைவு என மார்தட்டி கொள்ளும் மாநில அரசு, அந்த இறப்பின் எண்ணிக்கையிலும் பல மோசடிகளை செய்திருப்பது சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. மொத்தத்தில் கொரோனாவிடம் ஆளும் அதிமுக படு தோல்வியையே தழுவி இருக்கிறது. 

கொரோனா விசயத்தில் அலச்சியபோக்குடன் தொடர்ந்து நடக்கும் அரசின் நிலையில் மாற்றம் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும். கொரோனா பரிசோதனை அதிகரித்ததாலேயே இந்த பாதிப்பு எண்ணிக்கை என அரசு தெரிவித்து இருக்கிறது. அப்படி பார்த்தால், தினசரி மேற்கொள்ளும் பரிசோதனைகளில் 75% சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களிலேயே நடத்தப்படுகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனாலேதான் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகவும், மற்ற மாவட்டகளின் குறைவாகவும் இருக்கிறது. சென்னை போல, அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைகளை அதிகப்படுத்திடவும், அந்த எண்ணிக்கையை தினசரி முறைபடுத்தி வெளியிடவும் வேண்டும். 

இதை மேற்கோள் காட்டி தான், தனது ஒவ்வொரு விவாதம் மற்றும் பேட்டிகளில் மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் அவர்கள் மாவட்டம் வாரியாக எத்தனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்ற பட்டியலை தினசரி வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆனா, இதையும் ஆளும் அரசு காதில் போடுக்கொண்டதாக தெரியவில்லை. 

சென்னை போல மற்ற மாவட்டங்களிலும் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரித்தால் தான் மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு என்ற உண்மை நிலவரம் தெரிய வரும். ஆனால் இதை வேண்டுமென்றே அதிமுக அரசு அலச்சியமாக புறக்கணித்து வருகிறது. அதுமட்டும் இன்றி, கொரோனா பாதிக்கப்பட்டோர் இருக்கும் பகுதிகளை சென்னை போல மற்ற மாவட்டங்களிலும் மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பது இல்லை. 

மேலும், சென்னையில் நுற்றுக்கணக்கில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என முற்றிலும் அடைக்கப்பட்ட பகுதிகளை நாம் பார்க்க முடியும். அந்த பகுதியில், வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லவோ, அந்த பகுதி நபர்கள் வெளியே செல்லவோ தடை விதிக்கப்பட்டு, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களில்? அந்த நடைமுறை முற்றிலும் பின்பற்றப்படுவது இல்லை. 

எடுத்துக்காட்டாக, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் கடந்த 1 வாரத்தில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே வெளி மாநில தொடர்பு உடையவர். மீதி இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள். அந்த இருவரில் ஒருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த நிலையில் அவர்கள் வசித்து வந்த தெருக்களில் எந்தவித தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையையும் மாநகராட்சி எடுக்கவில்லை. கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த அந்த ஒரு நபரின் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களில் 5 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

ஆக மொத்தம் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 8 பேர் வரை கொரோனாவால் பதிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியை சீல் வைத்து தடுப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசு, மிகவும் மெத்தனமாக இரண்டு நாட்கள் மட்டும் வெறும் ப்ளீச்சிங் பவுடரை அந்த பகுதியில் தெளித்துவிட்டு சென்றது. இந்த நிலவரம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் அவர்களின் கவனத்திற்கு சென்றதும், அவரின் முயற்சியால் அந்த இறந்து போனவர் இருந்த தெருவில் மட்டும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இத்தனை பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்திருக்கும் நிலையில் அந்த பகுதியை சேர்ந்த எவருக்கும் மருத்துவ பரிசோதனையோ, தடுப்பு நடவடிக்கையையோ இந்த அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. இதே நிலைதான் மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த பாப்பன் கிணற்று சந்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் வசித்து வந்த சந்தில் அந்தவித தடுப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளவில்லை. 

மதுரையில் இன்று வரை 462 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் மதுரையில் எந்த பகுதியுமே தீவிர கண்காணிப்பு பகுதி என சீல் வைக்கப்படவில்லை, மருத்துவரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இது போல தான் மாநிலத்தின் அனேக மாவட்டங்களிலும் (சென்னை தவிர்த்து) கொரோனா பாதிப்பை கண்டும் காணாமலும் இந்த அரசு இருக்கிறது. சென்னை போல, மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே உண்மை கொரோனா பாதிப்பு எவ்வளவு என்று தெரியவரும். குறைந்தபட்சம், கொரோனா பதிப்பு உறுதியானோர் வசிக்கும் தெருக்களை சீல் செய்து அங்கு மட்டுமாவது முறையாக பரிசோதனைகளை செய்திட வேண்டும். 

கொரோனா சமூக பரவலை அடைந்து பல வாரங்கள் ஆகியும் இன்னமும் தன் இயலாமையை ஒத்துக்கொள்ளாத அரசு அதை மூடி மறைக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறது என்பது வேதனையான விஷயம். டாஸ்மாக் விசயத்தில் மேற்கொண்ட நடவடிக்கையில் பாதியாச்சும் கொரோனா கட்டுப்படுத்துதலில் காட்டவேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. 

தனித்திரு... விலகியிரு... விழித்திரு... என மக்களை எச்சரிக்கும் தமிழக அரசு, இனியாவது உரிய பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிகைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் என நம்புவோம்.

படங்கள் : சே.விஜயராகவன்
கருத்து : சே.சந்திரகாசன்

Comments