
இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அது போல் சீனாவின் மற்ற பகுதிகளிலும் தொற்று பரவி அதன் மொத்த எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதை சீன தேசிய சுகாதார ஆணையமும் உறுதி செய்துள்ளது. இது கொரோனாவின் இரண்டாவது அலையா எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சால்மன் மீன் வெட்டும் பலகையில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர்வாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 2 மாதங்களாக கொரோனா வைரஸிடம் இருந்து பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட பெய்ஜிங்கில் தொற்று பரவியதால் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா தொற்று முழுவதுமாக முடிவுக்கு வராததால் இதுபோல் அடிக்கடி தொற்று ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் கொரோனா குறித்து அறிந்திருப்பதால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என அதிகாரிகள் கருதுகின்றனர்.
மீன் வெட்டும் பலகையில் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் ஜின்ஃபாடி மார்க்கெட், பெங்டாயில் உள்ள கடல்வாழ் உயிரின சந்தையும் மூடப்பட்டுவிட்டது. பெய்ஜிங்கில் மொத்தம் 6 சந்தைகள் மூடப்பட்டுவிட்டன. இங்கு 45 பேருக்கு அறிகுறி இல்லாமலேயே கொரோனா உறுதியானது. ஜின்ஃபாடி சந்தையானது 112 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
Comments