
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று பரவுமா என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவும் ஆபத்தை விட தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்தான் அதிகம். குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று மட்டுமல்லாமல் எந்த நோயும் தாக்காமல் தாய்ப்பால் தடுத்தி நிறுத்தி விடுகிறது. என்கிறார் ஹூ தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம்.
கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான தாயின் தாய்ப்பாலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை. தாய்ப்பாலில் ஆர்என்ஏ மட்டும் கொஞ்சம் உள்ளது. எனவே நோய் தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்கின்றனர் மருத்துவ நிபுணரும் குழந்தை மற்றும் இளம் பருவ சுகாதார இயக்குனர் டாக்டர் அன்சூ பானர்ஜி.
குழந்தை பிரசவித்த தாய்மார்கள் பாலூட்டும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா நோய் தொற்றுள்ள தாய்மார்கள் பாலூட்டுவதற்கு குழந்தையை தொடுவதற்கு முன்பும் தொட்ட பின்னரும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பெண்கள் பாலூட்டும் போது முக கவசத்தை அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி சுற்றுப்புறங்களை தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும். தயக்கமில்லாமல் தாய்ப்பால் கொடுங்க என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இதே போல நியூயார்க்கின் மவுண்ட் சினாய் பகுதியில் உள்ள இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசன் ஆராய்ச்சியாளர்கள் குழு முக்கியமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய்மார்களின் தாய்பாலில் வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ளதாகவும் அந்த சக்தி குழந்தைகளை பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் பிரசவத்திற்குப் பிறகு அச்சமின்றி பாலூட்டலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தாய்ப்பால் மூலம் கொரோனா நோய் தொற்று பரவ வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்திகள் தாய்ப்பாலில் அதிகம் உள்ளதால் அது குழந்தையை பாதுகாக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments