தமிழகத்தில் இருந்து வந்தாலே அரசு முகாமில் கட்டாய தனிமை.. கர்நாடக அரசு பகீர் அறிவிப்பு.. புது ரூல்ஸ்!

Compulsory institutional quarantine for people from TN to Karnataka பெங்களூர்: தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் எல்லோரும் கட்டாயமாக அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் இதுவரை 7,213 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தம் 2,982 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். அதேபோல் 4140 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். 88 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டு தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் எல்லோரும் கட்டாயமாக அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து செல்லும் எல்லோரும் கட்டாயமாக 3 நாட்கள் அரசு முகாமில் தங்கி இருக்க வேண்டும். அதன்பின் அவர்கள் வீட்டில் 11 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு மட்டும் இருந்த விதி தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வரும் மக்கள் கட்டயாமாக ஒரு வாரம் அரசு முகாமிலும், ஒரு வாரம் வீட்டிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது என்பதால் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா பேட்டி அளித்துள்ளார். அதில் கொரோனா பரவலை தடுக்கவே இந்த விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. மாநிலத்திற்கு உள்ளே கொரோனா பரவல் இல்லை.

மாறாக வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகா வரும் நபர்கள் மூலம் மட்டுமே கொரோனா பரவுகிறது. அதை தடுக்கவே புதிய விதிகளை கொண்டு வருகிறோம். கர்நாடகாவில் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த முடிவு செய்து இருக்கிறோம். இது தொடர்பாக பிரதமர் மோடி உடன் ஆலோசனை செய்வோம் என்று, முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

Comments