
இந்த இடைப்பட்ட காலத்தில்தான் பாஜக ஒரு கணக்கு போட்டிருந்தது.. நாளுக்கு நாள் திமுக பலம்வாய்ந்து வரும் திமுகவை சமாளிக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, திமுகவை வீழ்த்த அதிமுகவை சரிக்கட்ட வேண்டும், அதற்கு அதிமுகவை பலப்படுத்த வேண்டும், இது சசிகலா என்ற ஆளுமையால்தான் முடியும் என்று நம்வுவதாகவும், ஒருவேளை அதிமுக - பாஜக இணைப்புக்கு தினகரன் சம்மதிக்கவில்லை என்றால், முக்கிய பொறுப்பை டெல்லியில் கொடுக்கலாம் என்று யோசித்து வருவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் கசிந்தது. எனவே சசிகலாவின் விடுதலையை முதலில் எதிர்நோக்குவது பாஜகவாக இருக்கக்கூடும் என்றே தெரிகிறது!! அதேபோல, அதிமுகவை பொறுத்தவரை இந்த 3 வருடமாக அளவுக்கு அதிகமான விமர்சனங்களை சசிகலா மீது வைக்கவில்லை.. ஜாக்கிரதையாகவே பேட்டிகள், பதில்கள் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. கட்சிக்குள் சேர்க்கப்பட மாட்டோம் என்று மேலோட்டமாக சொல்லி வருகிறார்களே தவிர, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து முற்றிலுமாக இதுவரை அவர் நீக்கப்படவுமில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
தற்போது திமுகவுக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும், நிர்ப்பந்தத்திலும் அதிமுக உள்ளதால், சசிகலா தயவு தேவைப்படவும் வாய்ப்புள்ளது அல்லது சசிகலா சம்பந்தமாக பாஜக மேலிடம் அழுத்தம் தந்தாலும் அந்த வகையிலும் தட்டிக் கழிக்க முடியாத நிலைமைக்கு அதிமுக ஆளாகலாம்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, முக்கியமாக சசிகலா வசம் ஜெயலலிதாவின் வீடியோக்கள் சில இருப்பதாக கூறப்படுகிறது.. அதனாலேயே பலரும் சசிகலாவை இப்போதுவரை பகைத்து கொள்ளாமல் உள்ளனர்.. ஆக மொத்தம் இப்போதைக்கு சசிகலா பேச்சு என்றால் சற்று கவனத்துடனேயே காய் நகர்த்தி வருகிறது.
சசிகலாவை விடுதலை செய்ய முயற்சிகள் நடந்து வரும் சமயத்திலேயே, திவாகரன் ரெடியாகிவிட்டார்.. ஏற்கனவே விட்டு போன பழைய அதிமுக அரசியல் புள்ளிகளை எல்லாம் தொடர்பு வளையத்துக்குள் கொண்டு வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. "அதிமுகவுக்கும், மன்னார்குடிக்கும் இடையே அசைக்க முடியாத பிணைப்பு உள்ளது... இதை யாராலும் தடுக்க முடியாது.. சசிகலாவை அதிமுக தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள்" என்று பகிரங்கமாகவே பேட்டி தந்துள்ளார். ஆனால், இவர்கள் எல்லாரையும் தாண்டி அதிக ஸ்பிரிட்டுடன் உள்ளது அமமுக பொதுச்செயலாளர் தினகரன்தான்.. சித்தி எப்போது விடுதலை ஆவார் என்று தவித்து கொண்டிருந்தவர்.. இப்போது புது தெம்பு அவருக்கு கிடைத்தது போல உள்ளது.. அதனால் விடுதலை ஆகி வருவதற்குள் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டாராம். அதுவும் இந்த சமயத்தில் பெரிய தலைவலியாக இருப்பது கொரோனா பிரச்சனை என்பதால், அதன் தடுப்பு நடவடிக்கைகளில்தான் இறங்கி உள்ளார்.. இது சாட்சாத் திமுகவின் பாணிதான் என்றாலும், வேறு வழியில்லை, மக்கள் பிரச்சனை இப்போது முழுவதுமாக கொரோனா பக்கம் திரும்பி உள்ளதால், அதற்கான முழுவீச்சில் களம் இறங்கி உள்ளாராம். அதுமட்டுமில்லை, இனி கட்சி நிர்வாகிகளை அழைத்து மனசு விட்டு பேசவும் போகிறாராம்.. ஏற்கனவே தினகரன் யார் பேச்சையும் கேட்கவில்லை என்று குற்றஞ்சாட்டிதான் முக்கிய புள்ளிகள் கட்சி தாவல் செய்தனர்.. இப்போது தினகரனே மனுசு மாறி நிர்வாகிகளிடம் பேச போகிறார் என்பது அமமுக தரப்பை உற்சாகமாக்கி உள்ளது. தொண்டர்களும் குதூகலமாகிவிட்டனராம்.. என்ன அடிச்சாலும் தாங்கறாரே மனுஷன்.. அதே ஸ்மைல்.. அதே பொறுமை.. கூல் தலைவர் என்று கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
ஆக, ஆளுக்கு ஒரு பக்கம் சசிகலா விடுதலையை எதிர்நோக்கினாலும், அவர் என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என தெரியவில்லை.. அமமுகவை வழிநடத்துவாரா? திவாகரனுக்கு ஆதரவு தருவாரா? அதிமுகவை கட்டி ஆள்வாரா? பாஜகவுக்கு ஆதரவு தருவாரா? அல்லது தினகரனுக்கு மூளையாக இருந்துவிட்டு ஒதுங்கியே இருப்பாரா என்பது போக போகத்தான் தெரியும்.
Comments