நாடு முழுக்க வேகமாக அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை.. மறைத்த நம்பர்களும் வெளியே வருகிறது

India coronavirus death numbers are increasing சென்னை: நாட்டில் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இறப்புகள் எண்ணிக்கை அதிகரிப்பதுதான். இறப்புகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக இதுவரை பெருமிதமாக சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இப்போது நிலைமை மாறிவருகிறது. வியாழக்கிழமை, நாடு முழுவதும் ஒரே நாளில், 357 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய நாட்களின் எண்ணிக்கையிலிருந்து ஒரு பெரிய ஏற்றம்.

இதற்கு முன்னர், ஒரே நாளில் அதிகபட்ச இறப்புகள் 294 ஆகும். ஒரு மாதத்திற்கு முன்பு, ஒவ்வொரு நாளும் 100 க்கும் குறைவான இறப்புகள் மட்டும்தான் பதிவாகின்றன. கடந்த ஒரு மாதத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 190 இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை மே 11 அன்று 2,206 ஆக இருந்தது, ஜூன் 11 அன்று 8,102 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம், ஒரு மாதத்திற்கு முன்பு 3.29 சதவீதத்திலிருந்து இப்போது 2.83 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஏன் என்றால், நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதால், அதோடு ஒப்பிட்டால் இறப்பு விகிதம் குறையத்தான் செய்யும். ஆனால், விகிதத்தை பார்க்காமல், எண்ணிக்கையை பார்க்க வேண்டிய காலகட்டம் இது.

மொத்த இறப்பு எண்ணிக்கையில் முக்கால்வாசிக்கும் மேல், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி மாநிலங்களில் நடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த மூன்று மாநிலங்களும் மொத்த இறப்புகளில் 65 சதவிகிதம் பங்கு வகித்தன. ஆனால் அதற்குப் பிறகு டெல்லியில் இந்த எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால், இந்த மாநிலங்கள் இப்போது நாட்டின் மொத்த கொரோனா இறப்புகளிலும் 75 சதவீதமாக உள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளின் உண்மையான எண்ணிக்கையை மறைக்க சில மாநில அரசுகள் முற்படுவது அம்பலமாகியுள்ளது. ஏப்ரல் இரண்டாவது வாரத்திலிருந்தே, மேற்கு வங்கம், 30 இறப்புகளை மட்டுமே பகிர்ந்தது. ஆனால் 72 இறப்புகள் அங்கு நடந்தது. பிற இணை நோய்களால் அந்த மரணங்கள் ஏற்பட்டவை என்று மேற்கு வங்க அரசு சமாளித்தது. ஆனாலும் அந்த 72 என்ற எண்ணிக்கை மேற்கு வங்க மாநில நம்பரில் சேர்க்கப்பட்டன. மே மாதத்தில் இதேபோன்ற சூழ்நிலையில் டெல்லி சிக்கியது.

அதிகாரப்பூர்வ புல்லட்டின் அறிக்கையை விட மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்தன. டெல்லி இறப்பு எண்ணிக்கையை சீராய்வு செய்து பார்த்தபோது, இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. தலைநகரில் உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை, நாட்டில் புதிய கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 10,800 க்கும் அதிகமாக இருந்தது. நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது மூன்று லட்சத்தை நெருங்கிவிட்டது. மகாராஷ்டிரா தனது தினசரி புதிய கேஸ்களில் பெரும் உச்சம் தொட்டுள்ளது. முதல் முறையாக 3,500 என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. எனவே, கொரோனா இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.

Comments