அரபு நாடுகளில் இருந்து கேரளாவிற்கு மட்டும் 44 விமானங்கள்.. தமிழகத்திற்கு ஒன்றுகூட இல்லை

56 flights made which have been bringing back stranded Indians in uae துபாய்: அரபு நாடுகளில் இருந்து கேரளாவிற்கு மட்டும் 44 விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தமிழகத்திற்கு ஒன்று கூட இயக்கப்படாதது குறித்து அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையே வேதனை ஏற்படுத்தி உள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அப்படி வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக விமானங்களை இயக்குவது ஜூன் 16ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரத்திற்கு 56 விமானங்கள் இந்தியாவில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதில் ஒரு விமானம் கூட தமிழகத்திற்கு அறிவிக்கப்படவில்லை ஆனால் அதேநேரம் கேரளாவிற்கு 44 விமானங்கள் இயக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, டெல்லி, ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விமானங்கள் அரபு நாடுகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.

தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இயக்கப்படாதது அரபு நாடுகளில் வசிக்கும் தமிழகர்களிடையே வேதனையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா லாக்டவுனால் வேலை இழந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் அவர்கள், விமானங்கள் மூலம் சொந்த நாடு திரும்ப ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் சர்வதேச விமான சேவை ரத்தால் விமானங்கள் இயக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் அதேநேரம் தமிழகத்திற்கு மட்டும் இயக்கப்படாதது குறித்து வளைகுடா தமிழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Comments