சென்னையில் லாக்டவுனை 100% தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்ல- ஹைகோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டம்

அரசு தரப்பு கருத்து சென்னை: சென்னையில் லாக்டவுனை 100% தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு படுமோசமாக உள்ளது. சென்னையில் 27,398 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாள்தோறும் 1,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் வருகிறது. அதேபோல் கொரோனா மரணங்களும் சென்னையில் தொடருகிறது.

சென்னையில் மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கோரதாண்டவமாடுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பொதுநல வழக்குகளை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேற்று விசாரித்தனர். அப்போது அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணிடம் சில கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் பதிலை இன்று தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இதுதொடர்பாக நீதிமன்றம் எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்கவில்லை எனவும், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு பிளீடர், இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து இன்று தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் பெஞ்ச் வழக்குகளை விசாரித்து முடித்த நிலையில், தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜரானார்.

அப்போது, சென்னையில் கொரோனா தொற்று உறுதி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை எனத் தெரிவித்தார். மேலும், நிலைமையை தமிழக அரசின் குழு, தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், சென்னையிலோ, தமிழகத்திலோ முழு ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் ஏதுமில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னையில் இருந்து மக்கள் வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இ - பாஸ்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறதே, அவை உண்மையா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், அப்படி எந்த தடையும் விதி்கப்படவில்லை. அனைத்தும் வதந்திகள். இ - பாஸ்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் இ பாஸ்கள் வழங்கி வருகின்றனர் என்றார்.

Comments