பலத்த அடி வாங்கப்போகும் இந்தியா.. நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள்.. தடதடவென சரியும் சந்தை..!

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் கொரோனா வைரஸால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே ஆட்டம் கண்டு வரும் நிலையில், இந்தியா போன்ற நாடுகள் என்ன செய்ய முடியும். இதன் எதிரொலி இந்திய சந்தைகளும் தடதடவென சரிந்து வருகின்றன. அதிலும் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வழக்குகள், இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பயத்தினை உருவாக்கியுள்ளது.

இதனால் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1,319 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 28,149 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 375 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,222 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின மதிப்பானது 75.55 ரூபாயின் வீழ்ச்சி கண்டுள்ளது.

சரி இந்த அளவுக்கு சந்தை வீழ்ச்சி காணுவதற்கு முக்கிய காரணங்கள் தான் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் தாக்கம் மடமடவென அதிகரித்து வருகிறது. ET அறிக்கையின் படி 1400 பேருக்கு கொரோனாவின் தாக்கம் இருக்கும் நிலையில் இதுவரையில் 35 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர். இதே 123 பேர் நலமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தாக்கம் எண்ணிக்கையினை குறைவாக வைத்திருக்காவிட்டால், அது மோசமான பின் விளைவினை சந்திக்ககூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சர்வதேச அளவில் 8,60,181 பேர் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 42,345 பேர் பலியாகியுள்ளனர். இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே, 1 லட்சம் பேர் பலியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு போர்ட்ஃபோலியோ முதலீடு (Foreign portfolio investors) என்பது கூட்டாக ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் சொத்துகளில் செய்யப்படும் முதலீடு ஆகும். இவை பங்குகள், பத்திரங்கள், வைப்புச் சான்றிதழ்கள் மற்றும் பிற பத்திரங்களை வாங்குவதன் மூலம் முதலீட்டாளர்கள் தினமும் போர்ட்ஃபோலியோ முதலீடுகளைச் செய்கிறார்கள். நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியில் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. NSDL அறிக்கையின் படி, வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டளார்கள் மார்ச் மாதத்தில் 15.9 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை (1.2 லட்சம் கோடி ரூபாய்) வெளியேற்றம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை முடக்கியுள்ளன. குறிப்பாக மாருதி சூசுகி நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தம் 83,792 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,58,076 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாகவும் அறிவித்துள்ளது. இதே போல் அசோக் லேலண்ட் 90% அதன் வாகன விற்பனை குறைந்து 2,179 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 21,535 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாகவும் அறிவித்துள்ளது. இதனையடுத்து நிஃப்டி ஆட்டோ குறியீடானது 2% வீழ்ச்சி கண்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய மாற்ற முடியாத கடனீடுகள் (NCDs) 60,000 கோடிக்கும் அதிகமான வட்டி மற்றும் அசல் அடுத்த மாதத்தில் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால் ஏற்கனவே ஊரடங்கினால் முடங்கியுள்ள நிறுவனங்கள், மேற்கண்ட இந்த பெரும் தொகையினை திரும்ப செலுத்துவதில் பிரச்சனையை காணக்கூடும். இதற்கிடையில் பட்டியலிடப்பட்ட பெரிய நிறுவனங்கள் கடந்த 24 மணி நேரத்தில் தனது debt securities- சிடம் பனத்தினை திரும்ப செலுத்துவதற்கான தேதியினை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனவாம்.

உலகின் மிக முக்கியமான சந்தைகள் கூட இன்று சரிவில் தான் உள்ளன. ஜப்பான் சந்தை 0.33% வீழ்ச்சியுடனும், இதே தென் கொரியா 1.34% வீழ்ச்சியுடனும், ஜப்பானின் பங்குகள் 3.48% வீழ்ச்சியுடனும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கூட சற்று சரிவில் தான் ஆரம்பித்தன. எஸ் & பி 500 2.27% சரிவுடனும், ஐரோப்பாவின் Euro Stoxx 50 futures 2.99% வீழ்ச்சியுடனும், ஜெர்மனின் டேக்ஸ் 2.89%வீழ்ச்சியுடனும், இதே FTSE futures 3.09% சரிவுடனும் காணப்படுகிறது.

Comments