
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலைக்கு செல்லாமல் இருக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றும்படி கூறியுள்ளன.
இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில் அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது முழுவதுமாக நீட்டிக்கப்படுமா, இல்லாவிட்டால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்களுக்கு மட்டும் நீட்டிக்கப்படுமா என பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன. மத்திய அரசும் லாக்டவுன் நீட்டிப்பு குறித்தோ நீக்கம் குறித்தோ எதையும் சொல்லவில்லை.
நோயின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் நாளை நடக்கவிருப்பதை இன்றே அரசு கூற வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. இந்த நிலையில் அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம் ஊரடங்கு குறித்து ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வார இடைப்பட்ட காலம் வரை நீட்டிக்கப்படலாம்.
கொரோனா பாதிப்பு ஜூன் மாதம் 3ஆவது வாரத்தில்தான் தீவிரமாக இருக்கும். எனவே இந்திய சுகாதாரத் துறை, அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என அறிக்கையில் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஏற்கெனவே இந்த ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் ஊதியம் இல்லாததால் உணவுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் வருமானத்திற்கு ஒரு வழி செய்யாமல் ஊரடங்கை நீட்டிப்பது என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகிவிடும் என பரவலாக பேசப்படுகிறது.
Comments