நலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு

நலம் விசாரிப்பு சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பதிலுக்கு பிரதமர் மோடியின் உடல்நலம் பற்றி கேட்டறிந்த ஸ்டாலின், கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அதனால் மக்கள் படும் சிரமங்கள் பற்றியும் பேசினார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் அழைத்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வீடுகளில் ஓய்வில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியிடம் இருந்து இன்று நண்பகல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு தான் தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் அழைத்த பிரதமர் மோடி, ஹவ் ஆர் யூ ஸ்டாலின் ஜீ என கனிவுடன் நலம் விசாரித்திருக்கிறார்.

மேலும், ஸ்டாலினிடம் தயாளு அம்மையார் உடல்நலம் பற்றியும் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி, தாமும் தன்னுடைய குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக கூறிய ஸ்டாலின், பதிலுக்கு பிரதமரிடம் அவரது உடல்நலம் பற்றி விசாரித்துள்ளார். இப்படி பரஸ்பர நலம் விசாரிப்புகள் முடிந்த பின்னர், கொரோனா விவகாரத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் மத்திய அரசு அரணாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் ஸ்டாலின். அதைக்கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசு மிக கவனமுடன் செயல்பட்டு வருவதாகவும், கொரோனாவில் இருந்து மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 8-ம் தேதி மத்திய அரசு நடத்தும் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் திமுக உறுதியாக பங்கேற்கும் என்றும், டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பார் எனவும் உறுதியளித்துள்ளார் ஸ்டாலின். மேலும், இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை திமுக வழங்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதனை பிரதமர் மோடி வரவேற்ற நிலையில், அடுத்த சில நிமிடங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது.

பிரதமர் மோடியை போலவே தானும் வழக்கமான நலம் விசாரிப்புகளை மேற்கொண்டிருக்கிறார் அமித்ஷா. பதிலுக்கு அமித்ஷா உடல்நலம் பற்றி ஸ்டாலினும் கேட்டறிந்தார். இதனிடையே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசிய விவகாரம் தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. கொரோனாவால் தமிழக அரசியலில் பெரியளவில் திருப்புமுனை ஏற்படுமோ என்ற அளவுக்கு இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

Comments