
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கடந்த மார்ச் 24ம் தேதி இரவு 8 மணி அளவில் பேசும் போது தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதுடன் கடைகளும் அடைக்கப்பட்டது, அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் வேலை இழந்த வெளிமாநில மக்கள் பசியாலும், வறுமையாலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தே செல்கிறார்கள். அப்படி செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்த நிலையில் பிரச்சனை பூதாகரமானது. குறிப்பாக டெல்லியில் இருந்து பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவிற்கு பல்லாயிரம் மக்கள் பசியின் கொடுமையானல் நடந்து சென்ற காட்சிகள் காண்போரின் கண்கலங்க வைத்தது. இதனால் உடனடியாக நடந்து செல்பவர்களை தடுத்து நிறுத்தி மாநிலங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைத்து உணவு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அத்துடன் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து ரத்தானதால் தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்துள்ளனர். லோகேஷ் என்ற மாணவர் உட்பட 30 பேரும் நடந்து வந்த நிலையில் , தெலங்கானாவின் பவன்பாலிக்கு லாரி ஒன்றில் வந்தபோது 30 பேரும் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த முகாமிலிருந்த பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் உடல்நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments