
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அது போல் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டை பெரிய மைதானங்களுக்கு கொண்டு சென்றுள்ளது அந்தந்த மாவட்ட நிர்வாகம்.
ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிருமி நாசினி கொடுத்து மக்களை கைக்கழுவ வைக்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூரில் தென்னம்பாளையத்தில் ஒரு காய்கறி சந்தையில் எப்போதும் இல்லாத முயற்சியாக ஒரு கிருமிநாசினி தெளிப்பு பாதையை அமைத்துள்ளனர். இந்த பாதை வழியே காய்கறி வாங்குவோர் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னர் அவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைக்கழுவ வைக்கிறார்கள். பின்னர் ஒரு கிருமி நாசினி சுரங்கம் எனும் பாதை வழியாக மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வழி முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றனர். இந்த வழியை கடக்க 3 முதல் 5 வினாடிகள் ஆகும். இதை திருப்பூர் மக்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தில் வேறெங்கும் கடைப்பிடிக்கப்படாத இந்த முயற்சியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொண்டு வந்துள்ளார். இது மாதிரியான புது முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது போல் அனைத்து மாவட்டங்களிலும் சுத்தத்தை கடைப்பிடித்தால் கொரோனாவை எளிதாக ஒழிக்கலாம் என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Comments