
இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுக்க திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவு சென்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக மாவட்டம் முழுக்க நிர்வாகிகளுக்கு வீடியோ கால் மூலம் அறிவுரைகளை வழங்கி உள்ளார். தமிழகம் முழுக்க மக்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும். மக்களை கூட்டமாக கூட விடாமல் உதவி செய்ய வேண்டும்.


சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் ஒ.எம்.ஆர். சாலை எண்: 2 எல்காட் அவென்யூவில் அமைந்துள்ள எனக்கு சொந்தமான அரவிந்தர் ரெசிடென்சி என்ற பெயரில் இயங்கி வரும் 29 தனிதனியாக அறைகள் மற்றும் கழிவு அறை, 32" தொலைக்காட்சி கொண்ட படுக்கைகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கொண்ட அறைகள் உள்ள கட்டிடத்தை முழுமையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரை மருத்துவமனைகளாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது போக சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்களுக்கு 1100 முகக்கவசங்கள் 25 லிட்டர் கிருமி நாசினி மற்றும் 1300 கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி உதவிகளை இவர் செய்துள்ளார். மேலும் சென்னை திமுக நிர்வாகி சுதர்சனம் சென்னை மாதவரம் மண்டலம் 3, சோழவரம், புழல், வில்லிவாக்கம் ஒன்றியம் மற்றும் 32 கிராம பஞ்சாயத்து உட்பட்ட துப்புரவு தொழிலாளிகளுக்கும் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் உடல் நலத்தை பாதுகாக்க 10000 கை கழுவும் சோப்பு, கிருமி நாசினி மற்றும் 20000 முக கவசம் வழங்கி இருக்கிறார்.
அதேபோல் இன்னொரு பக்கம் சென்னையில் சென்னை மாவட்ட செயலாளர் பிகே சேகர்பாபு அறிவுறுத்தலின்படி, அம்பத்தூர் தெற்குப் பகுதி செயலாளர் திரு.இராஐகோபால் முன்னிலையில், நேற்று 2ஆம் நாளாக காலை 93வட்ட பொது மக்கள் 2வது பிளாக், 3வது பிளாக், 6வது பிளாக், கெங்கையம்மன் நகர், O.N.G.C.பிளாட் பொதுமக்கள் அனைவருக்கும் மாஸ்க், கிருமி நாசினி, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, அந்தந்த பிளாக்கில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கிட வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உதவி உள்ளனர். சென்னை முழுக்க இப்படி திமுக நிர்வாகிகள் தீவிரமாக உதவி வருகிறார்கள்.
இது இப்படி இருக்க தமிழகம் முழுக்க வேறு மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். அதன்படி மதுரை திமுகவிற்கு கீழ் வரும் திருப்பரங்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் திரு.சுரேஷ் வேடர்புளியங்குளம், பாரதிநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு கொரோனா தொற்றுநோய் தடுப்பு முக கவசம் வழங்கி உதவினார். மேலும் திருப்பரங்குன்றம் யூனியன் துணை சேர்மன் இந்திரா ஜெயக்குமார், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மக்களுக்கு முக கவசம் வழங்கினர்.
மிக முக்கியமாக இவர்கள் மக்களின் உணவு தேவைகளை மாநிலம் முழுக்க பூர்த்தி செய்து இருக்கிறார்கள். உணவு இன்றி இருக்கும் தினக்கூலி மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பணம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி உள்ளனர். மக்களை இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
மேலும் விழுப்புரத்தில் செஞ்சி தொகுதி அவலூர்பேட்டை மற்றும் மேல்செவலாம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வீட்டு சமையல் உபயோகப் பொருட்கள், முகக்கவசம், சுத்திகரிப்பான், கையுறைகள் ஆகியவைகளை திமுகவினர் நேற்று வழங்கினார்கள். அதேபோல் விழுப்புரம் மத்திய மாவட்டத்திலுள்ள 14 ஒன்றிய கிளைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மூட்டைகள், கிருமி நாசினி கையுறைகள் ,வீடுகளுக்கு முகக்கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
திமுக இப்படி செயல்பட, இதே பணிகளை இன்னொரு பக்கம் திமுகவின் இளைஞரணியும் செய்து வருகிறது. தமிழகம் முழுக்க திமுக இளைஞரணி செயலாளர்கள் தீவிரமாக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகளை செய்து உள்ளனர். தமிழகம் முழுக்க உதவி கேட்ட, உதவி தேவைப்பட்ட மக்களுக்கு திமுக இளைஞரணி சார்பாக உதவிகள் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிக முக்கியமாக இது போன்ற பணிகளை திமுக மூத்த நிர்வாகிகள் வீடியோ கால் மூலம் தொடர்ந்து நிர்வகித்து வருகிறார்கள். வெளியே செல்ல முடியாத சில எம்பிக்கள் வீடியோ கால் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளனர். இளைஞர்கள் பலர் முனைப்போடு வந்து தானாக பணிகளை செய்து வருவதாக திமுக தரப்பில் கூறுகிறார்கள். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் திமுக தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.
Comments