ஏன் மக்களே இப்படி.. சொல்லச் சொல்லக் கேட்காமல் குவிந்த வாகனங்கள்.. பாடி பாலத்தில் பெரும் நெரிசல்!

 Huge traffic jam witnessed at Padi flyover in Chennai due to checking at a police checkpoint சென்னை: ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் அங்கு வாகனங்கள் அனைத்தையும் எதற்காக வருகிறார்கள் என்பதை சோதனை நடத்தி, விசாரித்தே விடுவித்து வருவதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து சென்னை நகருக்குள் வருவதற்கு பிரதானமான வழி பாடி மேம்பாலம். இந்த மேம்பாலம், ஒருபக்கம் வில்லிவாக்கம், மறுபக்கம் அம்பத்தூர், இன்னொரு பக்கம் அண்ணா நகர், கோயம்பேடு, அதற்கு எதிர்பக்கம் ரெட்ஹில்ஸ் மற்றும், ஆந்திரா என நான்கு முனை முக்கிய சந்திப்பாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் பாடி மேம்பாலத்தில் வாகனங்கள் அதிக அளவு சென்றன. அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர், பணிக்கு செல்வோர், அவசியமே இல்லாமல் வெளியில் செல்வோர் என அந்த மேம்பாலமே வாகனங்கள் நெரிசலால் திணறி வருகிறது. இதனால் மேம்பாலத்தின் நான்கு சாலைகளையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகே வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.

அநாவசியமாக வந்தவர்களை பிடித்து வைத்து விசாரித்து வரும் போலீசார், அத்தியாவசிய தேவைகளுக்காக வந்தவர்களை விசாரணைக்கு பின்னர் அனுப்பி வருகிறார்கள்.

சென்னை முழுவதும் ஊரடங்கு காரணமாக அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்ட போதிலும் சென்னை, திருவள்ளூர் ஆந்திராவை இணைக்க கூடிய முக்கிய பாலமாக இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த பாலம் மூடப்படாமல் உள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலை வழியாக இன்று காலை சென்ற நிலையில், போலீசார் வாகன தணிக்கை செய்தே அனுப்பி வருகிறார்கள். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது பலர் சமூக பரவலை கடைபிடிக்காமல் நெருக்கமாக வாகனத்தில் நிற்பதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவசியமின்றி பலரும் வெளியில் சுற்ற வாகனங்களில் வந்தமும் நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

Comments