கொரோனாவிலிருந்து மீண்ட 93 வயசு "சிக்ஸ் பேக்" தாத்தா, 88 வயசு பாட்டி.. கேரளாவில் அதிசயம்.. அற்புதம்

கோட்டயம் திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மிகவும் வயதான தம்பதியினர் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வயதானவர்களை கொரோனா தாக்கினால் மரணம் நிச்சயம் என்பதை இவர்கள் பொய்யாக்கியுள்னர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுள் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் கேரளாவும் மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ரன்னி பகுதியில் வசித்து வரும் தம்பதியரான தாமஸ் ஆபிரஹாம் (93), மரியம்மா (88) ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவர்களுக்கு இத்தாலியிலிருந்து திரும்பிய மகன், மருமகள், பேரன் மூலம் பரவியது. அவர்கள் மூவரும் எப்போதோ குணமடைந்துவிட்டார்கள். இந்த நிலையில் வயதான தம்பதி இருவரும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த தம்பதி பூரண குணமடைந்து தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர். இதுகுறித்து அவர் பேரன் கூறுகையில் தாத்தாவும் பாட்டியும் கொரோனாவிலிருந்து மீண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தாவுக்கு மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட எந்த கெட்டப்பழக்கமும் இல்லை.

எந்த விதமான உடற்பயிற்சி கூடத்திற்கும் செல்லாமலேயே தாத்தாவுக்கு சிக்ஸ் பேக் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அவர்கள் உயிர் பிழைத்தது அதிசயம்தான். அவர்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் தங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள்.

எனது தாத்தாவுக்கு பழங்கஞ்சி மிகவும் பிடிக்கும். மருத்துவமனையில் கூட அவர் அதையேதான் கேட்டார். அது போல் பாட்டிக்கு மீன் உணவுகள்தான் பிடிக்கும். நாங்கள் இத்தாலியில் இருந்து எப்போது வருவோம் என தாத்தா- பாட்டி காத்திருந்தார்கள். தற்போது அவர்கள் எப்போதும் பூரண குணமடைந்து வீட்டுக்கு வருவார்கள் என நாங்கள் காத்திருந்தோம். அது தற்போது நிறைவேறப் போகிறது என்றார்.

Comments