இந்தியாவுக்கு கருணை காட்டிய உலக வங்கி.. கொரோனாவுடன் போராட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி

உலக வங்கி ஒப்புதல்உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனாவின் தொற்று குறித்த அச்சம், இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது. உலகின் முன்னணி பொருளாதார நாடுகளே கொரோனா வைரஸினை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற பயமும் எழுந்துள்ளது.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, கொஞ்சம் முன்னரே இந்தியா முழுவது லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் முழுக்க முழுக்க கொரோனாவினை தடுக்க முடியாது. எனினும் அதிகளவில் பரவாமல் தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள் சில ஆய்வாளர்கள்.

உலகம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில் 53,216 பேர் பலியாகியுள்ளார். இதற்கிடையில் இந்தியாவில் தற்போது 2069 பேருக்கு இதன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 53 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்ல, இந்தியா பலவேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.


எனினும் இந்தியாவில் கொரோனாவினை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனையடுத்து உலக வங்கி கொரோனாவினை எதிர்கொள்ள 1 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 7,600 கோடி ரூபாயையும் ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

முதல் குழு திட்டங்களுக்கு $1.9 பில்லியன் டாலரினை 25 நாடுகளுக்கு உதவும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்களை செலுத்த தயாராக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இது கொரோனா வைரஸினால் ஏற்படும் விளைவுகளை சரி செய்ய உதவும் என்றும், பொருளாதார மீட்சியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேற்கூறிய 25 நாடுகளில் இந்தியா மிகப்பெரிய அளவில் 1 பில்லியன் டாலர் அளவு நிதியுதவி மானியத்தினைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கொரோனா வைரஸ் உபகரணங்கள், ஆய்வகங்கள், மருத்துவ கருவிகள் வாங்குவது உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Comments