
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2100 ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 60 ஆக அதிகரித்துள்ளது. மாநிலங்கள் அளவில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்ததாக கேரளாவும் 3-வது இடத்தில் தமிழகமும் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் கொரோனாவால் 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 39 பேர் இதுவரை குணமடைந்துள்ளனனர். 286 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிராவில்தான் 14 பேர் மரணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 265 ஆக உள்ளது. இதுவரை 26 பேர் கொரோனா சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளனர். இன்னமும் 237 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கேரளாவில் கொரோனாவுக்கு 2 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கேரளாவுக்கு அடுத்ததாக அகில இந்திய அளவில் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 6 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். தற்போது 227 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளனர். தமிழகத்தைத் தொடர்ந்து டெல்லியில் 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2 பேர் டெல்லியில் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான், உ.பி,, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100க்கும் அதிகம். ராஜஸ்தானில் 132; உ.பி.யில் 117; ஆந்திராவில் 132; கர்நாடகாவில் 110 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உ.பி.யில் 2 பேரும் கர்நாடகாவில் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான், ஆந்திராவில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தெலுங்கானாவில் அதிகபட்சமாக 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் 132 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் குணமடைந்தனர். 109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் 87 பேரும் மத்திய பிரதேசத்தில் 86 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலங்களில் தலா 6 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.
கொரோனாவால் மேற்கு வங்கத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். இம்மாநிலத்தில் 37 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். பஞ்சாப்பில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இங்கு 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 62, ஹரியானாவில் 43, பீகாரில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Comments