
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 234 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அடிக்கடி வெளியே செல்வது அதிகமாக உள்ளது. குறிப்பாக ஆட்டிறைச்சி வாங்க அதிகம் பேர் கூடுகிறார்கள். ஆட்டுக்கறி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரூ.1000 அளவுக்கு விற்பனையானது.
இந்நிலையில் மக்களை கொரோனாவில் இருந்து காப்பதற்காக அரசின் கோரிக்கையை ஏற்று மதுரையில் உள்ள 400 ஆட்டிறைச்சி கடைகளும் வரும் 14ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்க தலைவர் முத்து கிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன் மூலம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மதுரையில் ஆட்டுக்கறி குழம்பு வைப்பதற்கு வாய்ப்பில்லாத நிலை உருவாகி உள்ளது. வரும் ஞாயிறு அன்று மதுரையில் யாருக்கும் ஆட்டுக்கறி கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.
இதனிடையே மதுரையை பின்பற்றி மற்ற ஊர்களில் இதே முடிவினை எடுத்தால் கறிக்கடைகள் அனைத்தும் ஒரே நாளில் மூடப்படும் அபாயமும் உள்ளது. ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.
Comments