கிடுகிடு உயர்வு.. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா.. அனைவரும் டெல்லி சென்றவர்கள்!

Tamilnadu latest coronavirus update: 110 new positive cases reported, says Beela Rajesh
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் இன்று மாலை 6 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பீலா ராஜேஷ். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு வேண்டுகோளை ஏற்று டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாகவே முன்வந்து தகவல் தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் 11 அரசு ஆய்வகங்கள் உட்பட 17 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆறு பரிசோதனை மையங்கள் இந்த வாரத்தில் துவங்கப்படும்.

2726 சாம்பிள்கள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன, அதில் 234 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 110 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான். இதில் ஒருவர், பர்மாவை சேர்ந்தவர், இன்னொருவர் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்.

நேற்று வரை இந்த மாநாட்டில் பங்கேற்ற 80 பேருக்கு, சோதனைகளில் பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. இன்று 110 பேருக்கு பாசிட்டிவ். ஆக, மொத்தம் இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் 190 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆக மொத்தம், 234 நோயாளிகள் தற்போது தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சென்று வந்தவர்கள் தவிர, இன்று புதிதாக வேறு நோயாளிகள் பதிவாகவில்லை.

நோயாளிகள் வசிக்கக்கூடிய பகுதிகளிலிருந்து, 7 முதல் 8 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு லாக் செய்யப்பட்டு அங்கு அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்த ஆரம்பித்து உள்ளனர். டெல்லி மாநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் பலரும் அரசை தொடர்பு கொண்டுள்ளனர். 1103 அனைவருக்கும் நாளைக்குள் சாம்பிள்களை எடுத்து முடித்து விடுவோம். 110 பேரும் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். நெல்லை 6, கோவை 28, ஈரோடு 2, தேனி 20, திண்டுக்கல் 17, மதுரை 9, திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டு 7, சிவகங்கை 5, தூத்துக்குடி மற்றும் திருவாரூர் 2, கரூர் 1, காஞ்சிபுரம் 2, சென்னை மற்றும் திருவண்ணாமலை தலா 1 ஆக மொத்தம் 15 மாவட்டங்களை சேர்ந்த 110 பேர். ஆக மொத்தம் மாநாட்டிலிருந்து வந்தவர்கள் 19 மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள்.

Comments