முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி கொடுக்க வேண்டும்... பாஜகவுக்கு திமுக நோட்டீஸ்

Rs 100 crores to be paid to CMs public relief fund : DMK Notice to BJP சென்னை: கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை என திமுக மீது திட்டமிட்டுப் பொய்ச் செய்தி பரப்பும் பாஜக, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசியல் எல்லைகள் கடந்து அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

ஆனால், இந்த இக்கட்டான நேரத்திலும், திமுக மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஏதாவது அரசியல் இலாபம் அடையலாமா எனத் தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது.

திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.,க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தையும் வழங்கியுள்ளதோடு, தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளனர். அதோடு, திமுக தலைமை நிலையமான 'அண்ணா அறிவாலயத்தின்' வளாகத்தில் அமைந்துள்ள 'கலைஞர் அரங்கை' கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கியுள்ளது.

திமுக நிர்வாகிகளும் தங்களால் இயன்ற உதவிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி வருகின்றார்கள். இவை அனைத்தையும் 'முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது' போல், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை என தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அவதூறு பரப்பப்படுகிறது.

அவதூறு பரப்பி வரும் பாஜக கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான 'தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு' 100 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன், ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாகி, ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு 'வக்கீல் நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments